இந்தியா

தமிழ்த்தாய் வாழ்த்துக்கு மூன்றாவது இடம் – அமைச்சரவை விழாவில் மீண்டும் வெடித்த சர்ச்சை

சென்னை – கிண்டி ஆளுநர் மாளிகையில் இன்று நடைபெற்று வரும் தமிழக அமைச்சரவை விரிவாக்க நிகழ்ச்சியில், தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் மீண்டும் மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்டு இசைக்கப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

 

தமிழ்நாட்டில் வழக்கமாக நடைபெறும் அரசு விழாக்களின் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படுவதும், நிகழ்ச்சி நிறைவில் தேசிய கீதம் இசைக்கப்படுவதும் நீண்டகால மரபாகப் பின்பற்றப்பட்டு வருகிறது. ஆனால், தமிழக வெற்றிக் கழகம் தலைமையிலான புதிய அரசு பொறுப்பேற்ற பிறகு இந்த மரபில் மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன.

 

சென்னை நேரு உள்ளக விளையாட்டு அரங்கில் கடந்த மே 10ஆம் திகதி தமிழ் நாட்டின் முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் பதவியேற்ற விழாவின் போது, தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்டது. இதற்குக் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் தங்களது கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்திருந்தனர்.

இந்த விவாதங்களைத் தொடர்ந்து, இனிவரும் காலங்களில் அரசு நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் முதலாவதாகவே இசைக்கப்படும் இறுதியாக தேசிய கீதம் இசைக்கப்படும் என்று அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கடந்த சில தினங்களுக்கு முன்பு உறுதி அளித்திருந்தார்.

 

ஆனால், அந்த உறுதிமொழிக்கு மாறாக இன்று ஆளுநர் மாளிகையில் நடைபெறும் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு விழாவிலும் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு மூன்றாவது இடமே அளிக்கப்பட்டுள்ளது.

 

அரசு விழாக்களில் வந்தே மாதரம் இசைக்கப்பட வேண்டும் என்று சில மாதங்களுக்கு முன்பு மத்திய அரசு தெரிவித்திருந்த போதிலும், தமிழ்நாட்டில் மாநில அரசின் வழக்கமான மரபே தொடரப்பட்டு வந்தது.

 

இந்நிலையில், ஆளுநர் பங்கேற்ற தற்போதைய புதிய அரசின் அடுத்தடுத்த இரண்டு முக்கிய நிகழ்ச்சிகளிலும் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்டிருப்பது அரசியல் வட்டாரத்தில் மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

 

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button