மலையகம்

காலிமுகத்திடல் போராட்ட வெறுப்பை மலையகத்திலும் காட்டினார்கள்; நாடாளுமன்றத்தில் ஜீவன் தொண்டமான் ஆவேசம்!

நாட்டில் ஏற்பட்ட காலிமுகத்திடல் போராட்டத்தின் போது உருவான அரசியல் அதிருப்தியையும் வெறுப்பையும், மலையகத்தில் தமக்கும் தமது குடும்ப அரசியல் பின்னணிக்கும் எதிராக திசைதிருப்பி காட்டியுள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் சபையில் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய அவர், கடந்த அரசாங்கத்தில் இருந்து மக்கள் வாக்கு பெற்று இந்த சபைக்கு வந்திருக்கும் ஒரே நபர் தான் மட்டுமே என சுட்டிக்காட்டியதுடன், மலையக மக்களின் நலன்களுக்காகத் தொண்டமான் குடும்பம் செய்த அர்ப்பணிப்புகளையும் பட்டியலிட்டார்.

 

 

அவர் தனது உரையில் மேலும் குறிப்பிட்டதாவது,

 

” காலிமுகத்திடல் போராட்டம் என்பது ராஜபக்ச தரப்பினருக்கு எதிரான ஒரு போராட்டமாகவோ அல்லது அரசியல் புரட்சியாகவோ இருந்திருக்கலாம். ஆனால், அதே வெறுப்பையும் அதிருப்தியையும் மலையகத்தில் தொண்டமானுக்கும் எதிராகக் காண்பித்து , நாங்கள் அங்கு வேலை செய்யாதது போன்றதொரு தோற்றப்பாட்டை உருவாக்கியுள்ளனர்.

 

சௌமியமூர்த்தி தொண்டமான் மலையக மக்களுக்குப் பிரஜாவுரிமையைப் பெற்றுக்கொடுத்தார், ஸ்ரீ பாத கல்லூரியைக் கொண்டுவந்தார். அதுமட்டுமன்றி, தோட்ட நிர்வாகங்களின் கீழ் இருந்த 864 பாடசாலைகளை அரசாங்கத்துடன் இணைத்துக் கொடுத்தார். இதனை எவராலும் இல்லை என்று கூற முடியுமா?” எனக் கேள்வி எழுப்பினார்.

 

மறைந்த தலைவர் ஆறுமுகன் தொண்டமான் கொண்டுவந்த உதவியாசிரியர் நியமனங்கள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை நினைவு கூர்ந்த ஜீவன் தொண்டமான், தான் அமைச்சராக இருந்த குறுகிய காலப்பகுதியில் மலையகத்தில் 26,000 குழந்தைகளுக்கு இலவச காலை உணவுத் திட்டத்தை நடைமுறைப்படுத்தியதாகக் குறிப்பிட்டார்.

 

இதனைச் சுட்டிக்காட்டி, நாங்கள் செய்யும் மக்கள் நலத்திட்டங்களை ‘குடும்ப அரசியல்’ என்று கூறி கொச்சைப்படுத்துவதாகவும், இதனால் மலையக மக்களின் உரிமைகளைப் பேசாமல் இருக்க முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.

 

புதிய ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவின் வேலைத்திட்டங்களுக்காக நாங்கள் இரண்டு வருட கால அவகாசத்தைக் கொடுத்திருந்தோம் எனக் குறிப்பிட்ட அவர், தற்போதைய சூழலில் மலையகத்திற்கான அபிவிருத்தி மற்றும் நலன்புரி திட்டங்கள் உரிய முறையில் மக்களைச் சென்றடைவதில்லை என சுட்டிக்காட்ட விரும்புவதாகவும் தெரிவித்தார்.

 

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button