
தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் இறுதிவரை களமாடி முள்ளிவாய்க்கால் மண்ணில் வீரச்சாவினை தழுவிக்கொண்ட உறுதிப்படுத்தப்பட்ட ஒரு தொகுதி மாவீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்வு நேற்று சனிக்கிழமை உலகெங்கும் உள்ள நான்கு முக்கிய நாடுகளில் ஐந்து இடங்களில் சமநேரத்தில் மிக உணர்வெழுச்சியுடன் நடைபெற்றது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுத் துறைப் பொறுப்பாளரும் படைத்துறையின் ஒருங்கிணைப்புத் தளபதியுமான மாவீரர் பொட்டு அம்மான் அவர்கள் உட்பட, இதுவரை உறுதிப்படுத்தப்பட்ட மாவீரர்களுக்கு மதிப்பளிக்கும் வகையில் இந்த நினைவேந்தல் நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

நிகழ்வு நடைபெற்ற இடங்கள்:
“தமிழினத்தின் விடிவிற்காக இறுதிவரை தீரமுடன் போராடித் தமிழ் மண்ணில் வீழ்ந்த இம்மாவீரர்களுக்கு” மக்கள் திரளாகக் கூடி சுடர் ஏற்றி, மலர் தூவி தமது வீரவணக்கத்தைச் செலுத்தினர். இந்த நிகழ்வுகள் பின்வரும் இடங்களில் நடைபெற்றன:
• அவுஸ்திரேலியா (பேர்த்): Hossack Reserve Pavilion, Parkwood WA.
• அவுஸ்திரேலியா (மெல்போர்ன்): VTTC (Palmara Hall), Dandenong VIC.
• சுவிட்சர்லாந்து: Schulhausstrasse 9, Trimbach.
• பிரான்ஸ்: La Belle Epoque, ZAIQA, Villiers-le-Bel.
• பிரித்தானியா: உலகத்தமிழர் வரலாற்று வளாகம், ஆக்ஸ்போர்ட்.

சுவிற்சர்லாந்து நாட்டில் நடைபெற்ற இன்றைய வீரவணக்க நிகழ்வினை மாவீரர் பணிமனை சார்பாக போராளிகள் கட்டமைப்பு மற்றும் மேதகு வே. பிரபாகரன் நினைவெழுச்சி அகவம் ஆகியவற்றின் போராளிகளும் செயற்பாட்டாளர்களும் இணைந்து ஒழுங்குபடுத்தியிருந்தனர். சுவிஸ் நாட்டில் நடைபெற்ற இந்நிழ்வானது தமிழர்களின் மரபிற்கமைவாக முறையே பொதுச்சுடர் ஏற்றப்பட்டு தமிழீழத் தேசியக் கொடி ஏற்றப்பட்டு மாவீரர்களுக்கான திருவுருவப்படங்களுக்கு, மலர்மாலை பெற்றோர், உறவினர்களால் ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு மலர்மாலை அணிவிக்கப்பட்டு அகவணக்கத்துடன் ஆரம்பமாகி, சிறப்புரையும் இடம்பெற்றது .

தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் மகள் மாவீரர் துவாரகா/ அகமதி, புலனாய்வுத் துறைப் பொறுப்பாளர் மாவீரர் பொட்டு அம்மான் அவர்களின் மகன் மாவீரர் பார்த்தீபன்/ சாதுரியன், பிரிகேடியர் சொர்ணம் அவர்களின் மகள் மாவீரர் மான்மதி, தமிழீழ அரசியல் துறைப் பொறுப்பாளர் மாவீரர் பா. நடேசன் அவர்களின் மகள் மாவீரர் தமிழ்மதி ஆகிய இரண்டாம் தலைமுறைப் பிள்ளைகளின் விடுதலைப் போராட்டத்திற்கான தியாகம் வெளிப்படுத்தப்பட்ட தருணத்தில் கூடியிருந்த மக்களிடம் ஏற்பட்ட உணர்வுகளைச் சொற்களால் விவரிக்க முடியாது.

அத்துடன் அடுத்த தலைமுறைக்கு, மக்களுக்கு கடந்தும் விதமாக உறுதிப்படுத்தபட்ட ஒவ்வொரு மாவீரர்களினதும் சாதனைகளும் தியாகங்களும் வாழ்க்கைக் குறிப்புகளாகப் பகிரப்பட்டன. மாலை 6.30 மணியளவில் தேசியக் கொடி இறக்கலுடன் “புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்” என்ற தாரக மந்திரத்துடன் நிகழ்வுகள் நிறைவடைந்தன.
#Maaveerar #Veeravanakkam #PottuAmman #Tamileelam #RememberingHeroes #TamilDiaspora #MaveerarPanimanai #OurHeroes #Maaveerar #TamilHeritage #SwissTamilInfo #SwissTamil #Swiss #France #UnitedKingdom #Australia





