
இலங்கையில் உள்ள சிறைச்சாலைகளுக்குள் தொடர்ச்சியாக அமைதியின்மை ஏற்பட்டு வருவதால் பதற்ற நிலை உருவாகியுள்ளது.
அந்த வகையில் குருவிட்ட சிறைச்சாலையில் கைதிகள் குழுவொன்றுக்குள் இன்று வெள்ளிக்கிழமை மீண்டும் அமைதியின்மை ஏற்பட்டதைத் தொடர்ந்து, நிலைமையைக் கட்டுப்படுத்த சிறைச்சாலை அதிகாரிகள் கண்ணீர்ப்புகை பிரயோகித்ததாக சிறைச்சாலை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இந்தச் சம்பவத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாகவும், காயமடைந்த மேலும் பலர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆரம்பத்தில் வியாழக்கிழமை இரவு ஏற்பட்ட அமைதியின்மையை சிறைச்சாலை அதிகாரிகள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருந்தனர். எனினும், வெள்ளிக்கிழமை காலை மீண்டும் பதற்றமான சூழல் உருவானதாக கூறப்படுகிறது.
அமைதியின்மையின் போது, கைதிகள் குழுவொன்று சிறைச்சாலை மருத்துவமனைக்கு சேதம் விளைவித்ததாகவும்தகவல்கள் தெரிவிக்கின்றன.
நிலைமையை கட்டுப்படுத்தவும், சிறைச்சாலைக்குள் ஒழுங்கை மீண்டும் நிலைநாட்டவும் அதிகாரிகள் கண்ணீர்ப்புகை பிரயோகம் மேற்கொண்டனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அதிகாரிகள் முன்னெடுத்து வருகின்றனர்.
இதேவேளை கொழும்பு புதிய மெகசின் சிறைச்சாலையில் நேற்று (07) இரவில் ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக 11 கைதிகள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் ஏ.சி. கஜநாயக்க தெரிவித்துள்ளார்.
தற்போது அங்கு நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும், ஒன்பது கைதிகளை வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
தற்போது சிறைச்சாலையின் பாதுகாப்பிற்காக பொலிஸார், பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மற்றும் முப்படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகக் கூறிய அவர், நேற்று ஏற்பட்ட சூழ்நிலையைக் கட்டுப்படுத்துவதற்கும் முப்படை அதிகாரிகளின் ஒத்துழைப்பு பெறப்பட்டதாகக் குறிப்பிட்டார்.
மேலும், தற்போது ஏற்பட்டுள்ள நிலைமை குறித்து மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இதனிடையே, உருவாகியுள்ள சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு, இன்றைய தினம் சிறைச்சாலையில் கைதிகளை பார்வையிட சந்தர்ப்பம் வழங்கப்படமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.





