மலையகம்

200 வருடங்களாக வாழும் மக்களுக்கு 10 பேர்ச் காணியை வழங்க ஏன் மனமில்லை?” – நாடாளுமன்றத்தில் திகாம்பரம் எம்.பி கேள்வி!

மலையக மக்களின் காணிப் பிரச்சினை என்பது நீண்டகாலப் பிரச்சினையாகக் காணப்படும் போதிலும், மாறி மாறி ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள் அதற்கு முறையான தீர்வை வழங்கவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரம் சபையில் தெரிவித்துள்ளார்.

 

 

தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வரும் போது மலையக மக்களுக்கு வீ்ட்டுரிமை, காணியுரிமை வழங்குவதாகத் தேர்தல் பிரகடனத்தில் உறுதியளித்திருந்த போதிலும், கடந்த இரண்டு வருடங்களாக அது குறித்துப் பேசாமல் மௌனம் காப்பதாக அவர் சாடியுள்ளார்.

 

நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

 

“2015ஆம் ஆண்டில் நல்லாட்சி அரசாங்கத்தின் மூலமாக மலையக மக்களுக்குக் கிட்டத்தட்ட 8,000 வீடுகளைக் கட்டிக் கொடுத்தோம். இந்திய அரசாங்கத்தின் 4,000 வீடுகளுடனான நிதியுதவியோடு, இலங்கை அரசாங்கத்தின் பங்களிப்பாக மேலும் 4,000 வீடுகள் கட்டப்பட்டன. இதன் மூலம் 8,000 குடும்பங்களுக்குக் காணியுரிமை பெற்றுக்கொடுக்கப்பட்டது.

 

அதுமட்டுமன்றி, மலையக வரலாற்றிலேயே முதன்முறையாக அந்த மக்களுக்குக் ‘காணி உறுதிப் பத்திரம்’ வழங்கப்பட்டது நல்லாட்சி அரசாங்கத்தில் தான். அப்போதைய அமைச்சர் கயந்த கருணாதிலக்க ஊடாகவே இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது” என அவர் சுட்டிக்காட்டினார்.

 

நாட்டின் பொருளாதாரத்திற்குத் தேவையான அந்நியச் செலாவணியை ஈட்டிக்கொடுத்தவர்கள் மலையக மக்கள் தான். ஆனால், அவர்கள் இன்றும் லயத்து வாழ்க்கையையே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்று கவலை வெளியிட்டார்.

 

“மலையக மக்கள் இந்த நாட்டில் 200 வருடங்களுக்கும் மேலாக வாழ்ந்து வருகிறார்கள். அவர்களுக்குத் தலா 10 பேர்ச் காணியை வழங்குவதில் எந்தவிதப் பிரச்சினையும் கிடையாது. தோட்டங்களில் ஏராளமான காணிகள் இருக்கின்றன. ஆனால், அதனை அந்த மக்களுக்கு வழங்குவதற்கு யாருக்கும் மனமில்லை” என அவர் கடுமையாகக் குற்றஞ்சாட்டினார்.

 

தற்போதைய ஜனாதிபதி எதிர்க்கட்சியில் இருந்த போது மலையக மக்கள் மீது அதிக அக்கறை காட்டியதுடன், அவர்களுக்கு ஆதரவாகப் பேசியிருந்தார்.

 

அப்போது அவருக்கு அதிகாரம் இல்லை. ஆனால், இன்று அவரிடம் முழுமையான அதிகாரம் உள்ளது.

 

அரசாங்கம் மலையக மக்களுக்குக் காணியுரிமை வழங்கும் நல்ல திட்டங்களைக் கொண்டுவந்தால், எதிர்க்கட்சியில் இருக்கும் நாங்களும் அதற்கு இரு கரங்களையும் உயர்த்தி முழு ஆதரவை வழங்குவோம் என

அவர் மேலும் தெரிவித்தார்.

 

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button