உலகம்

பசியின் கொடுமையால் குழந்தைகளை விற்கும் அவலம்: ஆப்கானிஸ்தானில் விஸ்வரூபம் எடுக்கும் பஞ்சமும் பட்டினியும்!

ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் ஆட்சியின் கீழ் நிலவும் கடுமையான வேலையின்மை, வறட்சி மற்றும் சர்வதேச உதவிகள் முடக்கப்பட்டமை காரணமாக, நாட்டின் பெரும்பாலான மக்கள் ஒருவேளை உணவிற்காகத் தங்களது சொந்தக் குழந்தைகளையே விற்கும் அதிரவைக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

 

ஐக்கிய நாடுகள் சபையின் அண்மைக்காலத் தரவுகளின்படி, ஆப்கானிஸ்தானில் நான்கில் மூன்று பேர் தங்களது அடிப்படைத் தேவைகளைக் கூடப் பூர்த்தி செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர். மேலும், நாட்டின் ஒட்டுமொத்த மக்கள் தொகையில் பத்தில் ஒரு பங்கிற்கும் அதிகமானோர் (சுமார் 4.7 மில்லியன் மக்கள்) பஞ்சத்தின் விளிம்பில் வாழ்ந்து வருவதாக மதிப்பிடப்பட்டுள்ளது

ஆப்கானிஸ்தானின் கோர் மாகாணத்தின் தலைநகரான சாக்உயசான் பகுதியில் உள்ள ஒரு தூசு நிறைந்த சதுக்கத்தில், தினமும் நூற்றுக்கணக்கான ஆண்கள் விடிவதற்கு முன்பே கூடுகின்றனர். யாராவது தங்களுக்குக் கூலி வேலை தரமாட்டார்களா என்ற ஏக்கத்துடனேயே அவர்கள் காத்திருக்கின்றனர்.

 

அங்குள்ள 45 வயதான ஜூமா கான் என்பவர் கூறுகையில், கடந்த 6 வாரங்களில் தனக்கு வெறும் 3 நாட்கள் மட்டுமே வேலை கிடைத்ததாகவும், தனது பிள்ளைகள் தொடர்ச்சியாக மூன்று இரவுகள் பசியோடு உறங்கியதால், அண்டை வீட்டாரிடம் கையேந்தி மாவு வாங்கி வந்ததாகவும் கண்ணீருடன் பகிர்ந்துள்ளார். “என் பிள்ளைகள் பசியால் இறந்துவிடுவார்களோ என்ற பயத்துடனேயே நான் வாழ்கிறேன்” என அவர் கதறுகிறார்.

 

பசியின் கொடுமை தாங்க முடியாமல், பெற்ற மகள்களையே விற்கத் துணியும் அவல நிலைக்குப் பெற்றோர் தள்ளப்பட்டுள்ளனர். அப்துல் ரஷீத் அசிமி என்ற தந்தை, தனது 7 வயது இரட்டைப் பெண் குழந்தைகளான ரோகியா மற்றும் ரோஹிலா ஆகியோரைத் திருமணத்திற்காகவோ அல்லது வீட்டு வேலைக்காகவோ விற்கத் தயாராக இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

 

“ஒரு மகளை விற்றால், கிடைக்கும் பணத்தைக் கொண்டு மீதமுள்ள எனது பிள்ளைகளுக்குக் குறைந்தது நான்கு வருடங்களாவது உணவளிக்க முடியும். என் இதயம் உடைகிறது, ஆனால் வேறு வழியில்லை,” என அவர் அழுதுகொண்டே கூறுகிறார்.

 

மற்றொரு தந்தையான சயீத் அஹ்மத், தனது 5 வயது மகள் ஷாயிகாவுக்கு ஏற்பட்ட குடல் அலழற்சி மற்றும் கல்லீரல் பாதிப்புக்கான மருத்துவச் செலவை ஈடுகட்ட முடியாமல், அவளை ஏற்கனவே உறவினர் ஒருவருக்கு 200,000 ஆப்கானி (சுமார் 3,200 டொலர்) என்ற தொகைக்கு விற்றுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். அறுவை சிகிச்சை முடிந்துள்ள நிலையில், இன்னும் 5 ஆண்டுகளில் அக்குழந்தை அவளை விலைக்கு வாங்கியவரின் வீட்டிற்குச் செல்ல வேண்டும் என்ற அவல நிலை காணப்படுகிறது.

இதற்கு முன்னர் ஆப்கானிஸ்தானுக்கு அதிகளவில் நிதியுதவி வழங்கி வந்த அமெரிக்கா, கடந்த ஆண்டு முதல் தனது மனிதாபிமான உதவிகள் அனைத்தையும் துண்டித்துள்ளது. பிரித்தானியா உள்ளிட்ட ஏனைய முக்கிய நாடுகளும் தங்களது பங்களிப்பைக் கணிசமாகக் குறைத்துள்ளன. இதன் காரணமாக, 2025 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு ஆப்கானிஸ்தானுக்குக் கிடைத்துள்ள சர்வதேச நிதியுதவி 70 சதவீதத்திற்கும் மேலாகக் குறைந்துள்ளதாக ஐநா தரவுகள் காட்டுகின்றன.

 

மறுபுறம், நாட்டின் பாதிக்கும் மேற்பட்ட மாகாணங்களைப் பாதித்துள்ள கடுமையான வறட்சி நிலைமையை மேலும் மோசமாக்கியுள்ளது.

 

கோர் மாகாணத்தின் பிரதான பொது மருத்துவமனையின் மகப்பேறு மற்றும் குழந்தை தீவிர சிகிச்சைப் பிரிவு படுக்கைகள் அனைத்தும் நிரம்பியுள்ளன. போதிய உணவின்றிப் பிறக்கும் குழந்தைகள் அனைவரும் சுவாசிக்கக் கூட முடியாமல் ஒட்சிசன் உதவியுடன் போராடி வருகின்றனர்.

 

பாத்திமா ஹுசைனி என்ற செவிலியர் கூறுகையில், “இங்கு நாளொன்றுக்கு மூன்று குழந்தைகள் வரை இறக்கும் நாட்களும் உண்டு. ஆரம்பத்தில் இதைப் பார்க்கக் கடினமாக இருந்தது, ஆனால் இப்போது மரணம் எங்களுக்குச் சாதாரணமான ஒன்றாக மாறிவிட்டது,” என வேதனையுடன் தெரிவிக்கிறார்.

மருத்துவமனைகளில் போதிய மருந்துப் பொருட்கள் இல்லாததால், வறிய பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளுக்கு முழுமையான சிகிச்சை அளிக்க முடியாமல், அரைகுறையாகவே வீட்டிற்கு அழைத்துச் செல்லும் அவல நிலையும் தொடர்கிறது. அங்குள்ள மயானங்களை ஆய்வு செய்த போது, பெரியவர்களின் கல்லறைகளை விடக் குழந்தைகளின் சிறிய கல்லறைகளே இருமடங்கு அதிகமாகக் காணப்படுகின்றமை, குழந்தைகள் இறப்பு விகிதம் சடுதியாக அதிகரித்துள்ளதை நிரூபிப்பதாக ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.

 

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button