
சீனாவின் பல்வேறு மாகாணங்களில் பெய்துவரும் மிகக் கடுமையான கனமழை மற்றும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்டுள்ள பாரிய வெள்ளப்பெருக்குக் காரணமாக இதுவரை 21 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் பலரைக் காணவில்லை என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கனமழையினால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக நாட்டின் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிலோமீற்றர் பரப்பளவிலான பகுதிகள் மிகக் கடுமையான பாதிப்புக்களை எதிர்கொண்டுள்ளன.
குவாங்சி பகுதி மாகாணத்தில் பண்ணைத் தொழிலாளர்களுடன் பயணித்த பாரவூர்தி ஒன்று ஆற்று வெள்ளத்தில் சிக்கி அடித்துச் செல்லப்பட்டதில், அதிலிருந்த 10 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
அத்துடன், தென்மேற்கு குயிஜவ் மாகாணத்தில் நால்வரும், தெற்கு ஹுனான் மாகாணத்தில் நால்வரும் வெள்ளம் மற்றும் மண்சரிவில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.
மேலும், மத்திய ஹுபெய் மாகாணத்தின் தாழ்வான கிராமப் பகுதியொன்றில் மூவர் பலியாகியுள்ளனர்.
கனமழையின் தாக்கம் அதிகமாகக் காணப்படும் ஹுபெய் மற்றும் ஹுனான் மாகாணங்களின் பல பகுதிகளில் பாடசாலைகள், வணிக வளாகங்கள் மூடப்பட்டுள்ளதுடன், போக்குவரத்துச் சேவைகளும் முற்றாக இரத்துச் செய்யப்பட்டுள்ளன.
அங்குள்ள குடியிருப்புக்கள் மற்றும் வர்த்தகக் கட்டிடங்களைச் சுற்றி வெள்ளநீர் சூழ்ந்து காணப்படுவதுடன், பிரதான வீதிகள் மற்றும் சிற்றூர்திகள் நீரில் மூழ்கியுள்ளன.
இதனால் ஒட்டுமொத்தப் போக்குவரத்து மற்றும் மின் விநியோகக் கட்டமைப்புகளும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
பாதிக்கப்பட்ட மாகாணங்களில் மீட்புப் பணிகளை விரைவுபடுத்துவதற்கும், அனர்த்த நிவாரணங்களை வழங்குவதற்கும் சீனா அரசு முதற்கட்டமாக 2.2 கோடி அமெரிக்க டொலர் (22 Million USD) பேரிடர் நிவாரண நிதியை அவசரமாக ஒதுக்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.





