
கைத்தொழில் அமைச்சிடம் கோரியுள்ள சலுகைகளை அரசாங்கத்தால் வழங்க முடியாமல் போனால், பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்களின் சில்லறை விலைகள் நுகர்வோருக்குத் தாங்க முடியாத அளவுக்கு விரைவில் உயரும் என்றும், சந்தையில் தள்ளுபடிகளை வழங்குவதற்கான வாய்ப்புகள் குறையும் என்றும் உணவு பதப்படுத்துவோர் சங்கம் எச்சரித்துள்ளது.
இது குறித்து அச்சங்கத்தின் தலைவர் அருண சேனநாயக்க ஊடகவியலாளர்களிடம் கருத்துத் தெரிவிக்கையில்,
“அதிகரித்து வரும் மின்சாரக் கட்டணம் மற்றும் எரிபொருள் விலை உயர்வு ஆகியவற்றால் விநியோகச் சங்கிலிகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், உணவுப் பொருட்களுக்கான மூலப்பொருட்கள் மற்றும் உள்ளீடு பொருட்களுக்குக் கடுமையான பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இப்பிரச்சினைகளுக்கு உடனடியாகத் தீர்வு காணப்படாவிட்டால், உணவுப் பொருட்களின் சில்லறை விலைகள் மக்களுக்கு எட்டாத உயரத்திற்குச் சென்றுவிடும்.”
நிலைமையைக் கையாள்வதற்காகத் தங்களது சங்கம் அமைச்சிடம் சில முன்மொழிவுகளைச் சமர்ப்பித்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், தொழில்துறைக்கான எரிபொருள் சலுகை, தொழிற்சாலைகளின் உற்பத்தித் திறனைக் கருத்திற்கொண்டு மின்சாரக் கட்டணங்களுக்கான கட்டணக் குறைப்பு மற்றும் மூலப்பொருட்களுக்கான சலுகைகள் ஆகியவற்றைத் தாங்கள் கோரியுள்ளதாகத் தெரிவித்தார்
தற்போது விநியோகச் சங்கிலித் தடை காரணமாக ஏற்பட்டுள்ள மூலப்பொருள் பற்றாக்குறை, பெட்ரோலியத்தின் பக்கவிளை பொருட்களாக இருக்கும் சில பெக்கேஜிங் பொருட்களின் விலை உயர்வால் மேலும் மோசமடைந்துள்ளது என்று அவர் விளக்கினார்.
உதாரணமாக, மூன்று அடுக்குகள் கொண்ட பெக்கேஜிங் தயாரிப்பில், ஏதேனும் ஒரு அடுக்குக்குத் தேவையான மூலப்பொருள் பற்றாக்குறையானால், அது அந்த குறிப்பிட்ட உணவுப் பொருளின் முழு உற்பத்திச் செயல்முறையையும் பாதிக்கும். எனவே, இந்தச் சூழலைக் கையாள்வதற்கு அமைச்சு தலையிட்டு எமக்குச் சலுகைகளை வழங்க வேண்டும் எனத் திட்டவட்டமாகக் கோரியுள்ளோம்.
அண்மைய எரிபொருள் மற்றும் மின்சார விலை உயர்வு காரணமாக உற்பத்திச் செலவு, சேமிப்புச் செலவு, பெக்கேஜிங் விலை மற்றும் மூலப்பொருள் செலவுகள் அனைத்தும் அதிகரித்து, ஒரு அலகிற்கான உற்பத்திச் செலவை உயர்த்தியுள்ளது.”
கடந்த காலங்களிலும் இவ்வாறான நெருக்கடிச் சூழல்களில் அமைச்சு தமக்கு உதவியுள்ளதாகக் குறிப்பிட்ட அருண சேனநாயக்க, எரிபொருள் நெருக்கடியின் போது எவ்விதத் தடங்கலும் இன்றித் தங்களுக்கு எரிபொருள் கிடைக்க அமைச்சு வழிவகை செய்ததை நினைவு கூர்ந்தார்
.எனவே, தற்போதைய சூழ்நிலையிலும் தங்களது பிரச்சினைகளுக்கு அமைச்சு தீர்வு காணும் என நம்புவதாகவும் அவர் தெரிவித்தார்.





