
1980களின் பிற்பகுதியில் 10,000க்கும் மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்பட்டனர் அல்லது காணாமல் ஆக்கப்பட்டனர்: ITJP புதிய தரவுத்தளம் வெளியீடு!
இலங்கையில் இந்திய அமைதிகாக்கும் படை (IPKF) நிலைகொண்டிருந்த 1980களின் இறுதிப்பகுதியில், கொல்லப்பட்ட அல்லது வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட 10,000க்கும் மேற்பட்ட ஈழத் தமிழர்களின் பெயர் விபரங்கள் அடங்கிய புதிய டிஜிட்டல் தரவுத்தளமொன்று உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.
சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம்’ (International Truth and Justice Project – ITJP) அமைப்பு இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஆவணக்காப்பகத்தை (https://lkdd.itjpsl.com) பொதுமக்களின் பயன்பாட்டுக்காக வெளியிட்டுள்ளது.
1987ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் முதல் 1990 மார்ச் மாதம் வரையிலான காலப்பகுதியில், இந்திய அமைதிகாக்கும் படையினர் மற்றும் அவர்களுடன் இணைந்து செயற்பட்ட குழுக்களால் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்டவர்களின் விபரங்களே இவ்வாறு ஆவணப்படுத்தப்பட்டுள்ளன
இவ்வாறு பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் தமிழ் ஆண்கள் என்பதுடன், இது வெறும் எண்ணிக்கை அல்ல; திட்டமிட்டு வரலாற்றிலிருந்து மறைக்கப்பட்ட மனித உயிர்களின் பதிவாகும் என சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த வன்முறைகள் டிஜிட்டல் காலத்திற்கு முன்பு இடம்பெற்றதால் பாதிக்கப்பட்டவர்களின் முழுமையான விபரங்கள் ஒருபோதும் அதிகாரப்பூர்வமாகப் பதிவு செய்யப்படவில்லை எனத் தெரிவித்துள்ள சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் யாஸ்மின் சூக்கா (Yasmin Sooka),”திட்டமிட்டு அழிக்கப்பட்ட அடையாளங்களை மனித கண்ணியத்துடன் மீட்டெடுப்பதே தமது அமைப்பின் தற்போதைய பணி” எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், “முப்பது வருடங்கள் கடந்துவிட்ட போதிலும், நடந்த கொடூரங்களுக்கு இதுவரை யாரும் பொறுப்புக்கூறலுக்கு உள்ளாக்கப்படவில்லை; தண்டனையின்றி தப்பிக்கும் இந்த நிலை இன்னும் எவ்வளவு காலம் நீடிக்கப் போகிறது?” என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
மனித உரிமைகள் தரவு ஆய்வுக்குழுவைச்’ (Human Rights Data Analysis Group) சேர்ந்த மிசேல் டுசிச் என்பவரின் ஆலோசனையின் கீழ், பாதிக்கப்பட்ட குடும்பங்கள் மற்றும் சாட்சிகளின் வாக்குமூலங்கள், சத்தியப்பிரமாணங்கள் மற்றும் சரிபார்க்கப்பட்ட ஊடக அறிக்கைகளின் அடிப்படையில் சர்வதேச தரத்திற்கு அமைய இந்தத் தரவுத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் தங்களுக்குத் தேவையான விபரங்களை பிரதேசம், பாலினம், காலகட்டம் மற்றும் இனம் ஆகியவற்றின் அடிப்படையில் மிக இலகுவாகத் தேடிப் பெற்றுக்கொள்ளும் வகையில் இந்த இணையத்தளம் வடிவமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.





