
இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் கடல்சார் ஒத்துழைப்பை மேம்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட “ஐஓஎஸ் சாகர்” (IOS Sagar) சர்வதேசக் கடற்படைப் பயணத்தின் ஒரு அங்கமாக, இந்திய கடற்படைக் கப்பலான ‘சுனைனா’ (INS Sunayna) இன்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
நட்புறவுப்பாலம்” என்னும் தொனிப்பொருளில் முன்னெடுக்கப்படும் இந்த விசேட பயணத்தில், இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தைச் சேர்ந்த 16 நட்பு நாடுகளைச் சேர்ந்த 38 கடற்படை வீரர்கள் ஒரே குழுவாக இந்தக் கப்பலில் பயணித்து கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளனர்.
இந்தப் பயணத்தில் பங்களாதேஷ், இந்தோனேசியா, கென்யா, மலேசியா மாலைத்தீவு, மொரிஷியஸ், மொசாம்பிக், மியான்மர் சிங்கப்பூர், சீஷெல்ஸ், தென்னாப்பிரிக்கா, தான்சானியா, தாய்லாந்து மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் (UAE) ஆகிய நாடுகளைச் சேர்ந்த கடற்படை அதிகாரிகள் மற்றும் மாலுமிகள் உள்ளடங்குகின்றனர்:
இந்திய உயர்ஸ்தானிகராலயமும், இலங்கை கடற்படையினரும் இணைந்து இந்த பயணத்தின் விபரங்களையும், 16 நாடுகளின் கடற்படையினரை நேரில் சந்தித்து கலந்துரையாடும் விசேட வாய்ப்பினையும் ஊடகங்களுக்கு ஏற்படுத்தியிருந்தனர்.
இதன் போது, இந்திய கடற்படையினர் இலங்கை கடற்படையினரால் பாரம்பரிய முறைப்படி வரவேற்கப்பட்டதுடன், இருதரப்பு உறவை மேம்படுத்தும் வகையில் நினைவுச் சின்னங்களும் பரிமாறிக்கொள்ளப்பட்டன.
இந்தியக் கடற்படையின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க பயணம், தற்போது அதன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
இந்தியாவின் கொச்சியில் உள்ள விசேட பயிற்சிப் பள்ளிகளில் 20 நாட்கள் வழங்கப்பட்ட தரைவழிப் பயிற்சிகளுடன் இந்தப் பயணம் ஆரம்பமானது.
அதனைத் தொடர்ந்து, கடலில் 50 நாட்கள் தொடர்ச்சியான பயணங்கள் மற்றும் கூட்டுப் பயிற்சிகள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டன.
இந்தப் பயணத்தின் போது 16 நாடுகளைச் சேர்ந்த வீரர்களும் தங்களின் கூட்டு அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டதுடன், அவசர காலங்களில் எவ்வாறு ஒருங்கிணைந்து செயற்படுவது என்பது தொடர்பான நிலையான நடைமுறைகளையும் (SOPs) பரிமாறிக்கொண்டனர். எதிர்காலத்தில் தேவை ஏற்படும் பட்சத்தில், ஒரு பொதுவான தளத்தில் நின்று கூட்டுப் பாதுகாப்புடன் செயற்படுவதற்கான வலுவான அடித்தளம் இதன் மூலம் இடப்பட்டுள்ளது” என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தப் பயணத்தின் போது, மொத்தம் 7 சர்வதேச துறைமுகங்களுக்கு விஜயம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டிருந்தது. தற்போது இந்தப் பயணம் 90 வீதம் நிறைவடைந்துள்ள நிலையில், இந்தியாவின் கொச்சிக்கு திரும்புவதற்கு முன்னதான இறுதித் துறைமுக விஜயமாக கொழும்பு அமைந்துள்ளது.
கப்பலின் கட்டளை அதிகாரி சித்தார்த் சவுத்ரி (Siddharth Chaudhary) தலைமையில் முன்னெடுக்கப்பட்ட இந்தப் பயணம் நிறைவடைந்ததும், இதில் பங்கேற்ற ஏனைய நாட்டு வீரர்கள் தத்தமது நாடுகளுக்குத் திரும்பவுள்ளனர்.
இந்நிலையில் சூரியன் செய்திப்பிரிவுக்கு கருத்து தெரிவித்த கப்பலின் கட்டளை அதிகாரி சித்தார்த் சவுத்ரி ,
பிராந்திய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதில் இந்தப் பயணம் ஒரு காத்திரமான பங்களிப்பை வழங்கும்.
பிராந்திய கடல்சார் பாதுகாப்பை பலப்படுத்துதல் மற்றும் ‘ஒரே பெருங்கடல், ஒரே நோக்கம்’ (One Ocean, One Mission) என்ற அடிப்படையில் கூட்டு நாடுகளிடையே ஒத்துழைப்பை அதிகரிப்பதே இதன் நோக்கமாகும்.
கொழும்பில் தங்கியிருக்கும் காலப்பகுதியில், இலங்கை கடற்படையினரின் செயல்பாடுகளைக் கற்றுக்கொள்வதுடன், இரு நாட்டு கடற்படையினருக்கும் இடையிலான தொழில்முறை மற்றும் விளையாட்டு ரீதியிலான சுமுகக் கலந்துரையாடல்களும், கொழும்பு நகரைச் சுற்றிப் பார்க்கும் நிகழ்வுகளும் திட்டமிடப்பட்டுள்ளன என அவர் மேலும் தெரிவித்தார்.





