தமிழீழம்

மன்னார் மாவட்டத்தில் மணல் அகழ்வு அனுமதிப்பத்திரங்கள் அனைத்தும் தற்காலிகமாக இடைநிறுத்தம்

மன்னார் மாவட்டத்தில் மணல் அகழ்வு அனுமதிப்பத்திரங்கள் தொடர்பாக எழுந்துள்ள சிக்கல் நிலைமையினைக் கருத்திற்கொண்டு, தற்போது நடைமுறையிலுள்ள அனைத்து அனுமதிப்பத்திரங்களையும் தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

 

சட்டவிரோத மணல் கடத்தலைத் தடுத்தல், மணல் அகழ்வு அனுமதிப்பத்திரங்களை வழங்குவதை முறைப்படுத்துதல் மற்றும் மணல் விலையைக் கட்டுப்படுத்துதல் தொடர்பாக நேற்று (10) மன்னார் மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற விசேட கலந்துரையாடலின் போதே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

 

மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரும், பிரதி அமைச்சருமான உபாலி சமரசிங்க தலைமையில், அரச அதிகாரிகள் மற்றும் மணல் வர்த்தகர்களின் பங்கேற்புடன் இக்கலந்துரையாடல் இடம்பெற்றது.

 

இந்தத் தீர்மானம் மற்றும் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க கருத்துத் தெரிவிக்கையில்,

 

“மணல் வர்த்தகர்கள் தமது தரப்புப் பிரச்சினைகள் மற்றும் ஆலோசனைகளை முன்வைத்தனர். மணல் விலையைக் கட்டுப்படுத்தும் நோக்கில், வறிய குடும்பங்களின் வீட்டுத் தேவைகளுக்காக 3 கியூப் மணலை 50,000 ரூபாவிற்கும், அரச கட்டுமானப் பணிகளுக்காக 3 கியூப் மணலை 65,000 ரூபாவிற்கும் வழங்குவதற்கு உடன்பாடு எட்டப்பட்டது.

 

அத்துடன் ஏனைய பிரதேசங்களுக்கான போக்குவரத்து செலவாக ஒரு கிலோமீற்றருக்கு 350 ரூபா கட்டண அதிகரிப்பை வழங்குமாறும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.”

 

அனுமதிப்பத்திரம் வழங்கும் புதிய நடைமுறை குறித்து மேலும் விளக்கிய பிரதி அமைச்சர், இனிவரும் காலங்களில் புதிய சட்டவிதிகளின் கீழேயே அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்படும் என வலியுறுத்தினார்.

 

புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகத்தின் பணிப்பாளர் மற்றும் சம்பந்தப்பட்ட அமைச்சரின் அறிவுறுத்தலின் பேரில், மாவட்டச் செயலாளரின் நேரடி மேற்பார்வை மற்றும் இறுதி முடிவின் கீழ் அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்கான புதிய சட்டவிதிகள் வரைபு செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

 

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button