
வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கு எதிரான முறைப்பாடுகளை, நிதி நுகர்வோர் இலகுவாக சமர்ப்பிக்கும் வகையில், இலங்கை மத்திய வங்கி புதிய இணையவழி முறைப்பாட்டு முகாமைத்துவ முறைமை (Online Complaint Management System) ஒன்றினை அறிமுகப்படுத்தியுள்ளது.
மத்திய வங்கியின் ஒழுங்குமுறை கட்டமைப்புக்குள் முறைப்பாடுகளை கையாளுவதில் பொறுப்புக்கூறல், செயல்திறன் மற்றும் வெளிப்படைத்தன்மை ஆகியவற்றை அதிகரிக்கும் நோக்கில் இந்த டிஜிட்டல் தளம் உருவாக்கப்பட்டுள்ளது.
வாரத்தின் 7 நாட்களும் 24 மணித்தியாலங்களும் (24/7) செயற்படும் இந்தத் தளத்தின் மூலம், நுகர்வோர் தமக்கு வசதியான நேரத்தில் முறைப்பாடுகளை பதிவு செய்ய முடிவதுடன், தங்களின் முறைப்பாடுகளின் தற்போதைய நிலை (Status) மற்றும் அதன் முன்னேற்றங்களையும் இணையவழியிலேயே நேரடியாகக் கண்காணித்துக் கொள்ள முடியும்.
மேலும், காகித ஆவணங்கள் அடிப்படையிலான செயல்பாடுகள் குறைக்கப்படுவதால், முறைப்பாடுகளுக்கு தீர்வுகாண்பதில் ஏற்படும் காலதாமதங்களும் தவிர்க்கப்படும் என மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.
நுகர்வோர் தங்களின் முறைப்பாடுகளை அல்லது குறைகளை முதற்கட்டமாக சம்பந்தப்பட்ட நிதிச் சேவை வழங்குநரிடமே (வங்கி அல்லது நிதி நிறுவனம்) நேரடியாக சமர்ப்பிக்க வேண்டும்.
அவ்வாறு சமர்ப்பிக்கப்பட்ட முறைப்பாடுகளுக்கு அந்த நிறுவனங்கள் தீர்வு காணத் தவறினால் அல்லது அவர்களின் பதில்கள் திருப்தியளிக்காத பட்சத்தில் மட்டுமே, இந்த இணையவழி முறைமையின் ஊடாக இலங்கை மத்திய வங்கியிடம் முறையிட முடியும்.
இந்தத் தளத்தைப் பயன்படுத்தும் நுகர்வோர், தாங்கள் சமர்ப்பிக்கும் தகவல்கள் தெளிவானதாகவும், துல்லியமானதாகவும் இருப்பதை உறுதி செய்வதோடு, அது தொடர்பான அனைத்து ஆவணங்களையும் இணைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
நிதி நுகர்வோர் இந்த புதிய சேவைக்காக வடிவமைக்கப்பட்டுள்ள https://reachus.cbsl.lk/ என்ற உத்தியோகபூர்வ இணையத்தள முகவரியின் ஊடாக பிரவேசித்து தங்களின் முறைப்பாடுகளை பதிவு செய்ய முடியும் என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.





