
நாட்டின் பல்வேறு பகுதிகளில் நிலவும் சீரற்ற வானிலையைத் தொடர்ந்து, நான்கு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கையை தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் விடுத்துள்ளது.
இதில் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் நிலவும் கடும் மழை காரணமாக, அங்கு மூன்றாம் கட்ட (Level-3) எச்சரிக்கையான ‘சிவப்பு எச்சரிக்கை’ விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த மாவட்டங்களில் மண்சரிவு அபாயம் நிலவும் பகுதிகளில் வாழும் மக்கள், உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
குறிப்பாக மலைச்சரிவுகளில் வசிக்கும் மக்கள் அதிக அவதானத்துடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இதேவேளை, பதுளை மற்றும் மாத்தளை மாவட்டங்களுக்கு இரண்டாம் கட்ட (Level-2) செம்மஞ்சள் அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த மாவட்டங்களில் வசிக்கும் மக்கள், மண்சரிவுக்கான ஆரம்ப அறிகுறிகள் குறித்து விழிப்புடன் இருக்க வேண்டும் எனவும், மழை தொடரும் பட்சத்தில் எந்நேரமும் வெளியேறத் தயாராக இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இதனிடையே, தரைப்பகுதியில் திடீரென வெடிப்புகள் தோன்றுதல், மரங்கள், மின் கம்பங்கள் அல்லது வேலிகள் ஒருபுறமாகச் சாய்தல், கட்டடங்களின் சுவர்கள் மற்றும் தரைத் தளங்களில் புதிய விரிசல்கள் ஏற்படுதல், நீர் ஊற்றுகள் திடீரெனத் தோன்றுதல் அல்லது தெளிந்த நீர் திடீரென சேற்று நீராக மாறுதல் போன்ற மண் சரிவுகளுக்கு முன்னதாக தென்படக்கூடிய அறிகுறிகள் குறித்து பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறு கோரப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஏதேனும் இடர்கள் ஏற்பட்டால், அது குறித்து உடனடியாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்திற்கோ அல்லது அருகில் உள்ள காவல்துறை நிலையத்திற்கோ அறிவிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது





