
நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட ஈரான் அமெரிக்கா இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தம் கடந்த புதன்கிழமை கைச்சாத்திடப்பட்ட நிலையில், தொடர்ச்சியாக, ஈரான் துறைமுகங்களுக்கு எதிரான அனைத்து கடல்வழி முற்றுகைகளையும் திரும்பப் பெற்றுள்ளதாக அமெரிக்க மத்திய இராணுவ கட்டளைப் பிரிவு நேற்று (18 ) அறிவித்துள்ளது.
இது குறித்து அமெரிக்க இராணுவம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் வழிகாட்டுதலின்படி, ஈரான் துறைமுகங்கள் மற்றும் கடலோரப் பகுதிகளுக்கான கடல் போக்குவரத்துத் தடை நீக்கப்பட்டுள்ளது. இனி அங்கிருந்து வரும் அல்லது செல்லும் கப்பல்களை அமெரிக்கப் படைகள் தடுக்காது. எனினும், ஒப்பந்தம் சரியாகச் செயல்படுவதைக் கண்காணிக்க அமெரிக்கக் கடற்படைக் கப்பல்கள் எல்லையில் நிலைநிறுத்தப்படும் என கூறியுள்ளார்.
அத்துடன்,அமெரிக்க முற்றுகை நீக்கப்பட்டதை அடுத்து, சரக்குக் கப்பல்களின் போக்குவரத்து ஆரம்பமாகியுள்ள நிலையில்,நேற்று ஒரே நாளில் மட்டும் 1.25 கோடி கொள்கலன் எண்ணெய் கப்பல்கள் மூலம் கொண்டு செல்லப்பட்டுள்ளதாக அமெரிக்கத் துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் தெரிவித்துள்ளார்.
மேலும்,பாரசீக வளைகுடா நீரிணை வழியாகச் செல்லும் கப்பல்களுக்கு விரைவான அனுமதி வழங்க ஈரான் நீரிணை நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
போரின்போது அப்பாதையில் பதிக்கப்பட்ட கண்ணிவெடிகளை அகற்றும் பணிகளையும் ஈரானின் தேசிய பாதுகாப்பு குழு ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.





