
‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ என்ற தொலைக்காட்சி தொடர் மூலம் சின்னத்திரை ரசிகர்களிடம் பிரபலமான நடிகர் குமரன் தங்கராஜன் கதையின் நாயகனாக அறிமுகமாகும் ‘குமார சம்பவம் ‘எனும் திரைப்படத்தில் இடம்பெற்ற ‘ விடியாத இரவொன்று..’ எனத் தொடங்கும் முதல் பாடலும் , பாடலுக்கான லிரிக்கல் விடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை இசையமைப்பாளரும், பின்னணி பாடகருமான ஷான் ரோல்டன் அவருடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு படக்குழுவினருக்கும், இசையமைப்பாளருக்கும் வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.
நடிகரும், இயக்குநருமான பாலாஜி வேணுகோபால் இயக்கத்தில் உருவாகி உள்ள ‘குமார சம்பவம்’ எனும் திரைப்படத்தில் குமரன் தங்கராஜன், பாயல் ராதாகிருஷ்ணா, ஜி. எம். குமார், குமரவேல் ,பால சரவணன், வினோத் சாகர் , லிவிங்ஸ்டன் , சிவா அரவிந்த் , சார்லஸ் வினோத், அர்ஜய் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஜெகதீஷ் சுந்தரமூர்த்தி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு அச்சு ராஜாமணி இசையமைத்திருக்கிறார். ஃபேமிலி என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை வீனஸ் இன்ஃபோடெய்ன்மென்ட் மற்றும் சிக்ஸ் ஸ்டார் என்டர்டெயின்மென்ட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கிறது.
இப்படத்தின் இறுதி கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் தருணத்தில் ‘ விடியாத இரவொன்று பகலாவதில்லை’ எனத் தொடங்கும் முதல் பாடலும், பாடலுக்கான லிரிக்கல் விடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த பாடலை பாடலாசிரியர் பாலாஜி வேணுகோபால் எழுத, இசையமைப்பாளரும், பின்னணி பாடகுருமான அச்சு ராஜாமணி பாடி இருக்கிறார். பாடலின் வரிகள் அழுத்தமாகவும், கவனத்தை ஈர்க்கக் கூடியதாக இருப்பதாலும் , மெல்லிசை பாடலாக உருவாகி இருப்பதாலும் இசை ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது.





