
Godzilla vs. Kong திரைப்படத் தொடரில் ஜியா (Jia) கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் உலகம் முழுவதும் அறியப்பட்ட காது கேளாத இளம் நடிகை கெய்லி ஹாட்டில் (Kaylee Hottle) (வயது 18) அமெரிக்காவின் மெரிலாண்ட் மாநிலத்தில் இடம்பெற்ற கார் விபத்தில் உயிரிழந்துள்ளார்.
2021ஆம் ஆண்டு வெளியான Godzilla vs. Kong திரைப்படத்தில் அனாதைச் சிறுமி ஜியாவாக நடித்த ஹாட்டில், 2024ஆம் ஆண்டு வெளியான Godzilla x Kong: The New Empire திரைப்படத்திலும் அதே கதாபாத்திரத்தில் மீண்டும் நடித்திருந்தார்.
அவரது தந்தை ஜோஷுவா ஹாட்டில், அமெரிக்க சைகை மொழியில் (ASL) பேஸ்புக்கில் வெளியிட்ட காணொளி மூலம் மகளின் உயிரிழப்பை உறுதிப்படுத்தினார்.
Frederick County Sheriff’s Office தெரிவித்ததாவது, செவ்வாய்க்கிழமை அதிகாலை சுமார் 2.50 மணியளவில், மெரிலாண்ட் மாநிலத்தின் Ijamsville பகுதியில் ஒரே வாகனம் சம்பந்தப்பட்ட விபத்து இடம்பெற்றுள்ளது. அதிக வேகமே விபத்திற்கான முக்கிய காரணமாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
19 வயதுடைய சாரதி உயிருக்கு ஆபத்தில்லாத காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மற்றொரு பயணி சம்பவ இடத்திலேயே சிகிச்சையை மறுத்துள்ளார்.
ஹாட்டில் கல்வி கற்ற Texas School for the Deaf, ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்ததுடன், குடும்பத்தின் தனியுரிமையை மதித்து, விபத்து குறித்து ஊகங்களை பரப்ப வேண்டாம் என பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.
Godzilla x Kong திரைப்படங்களை தயாரித்த Warner Bros. நிறுவனமும் சமூக வலைத்தளமான X-இல் இரங்கல் பதிவு வெளியிட்டு, Rebecca Hall, Dan Stevens, Brian Tyree Henry உள்ளிட்டோருடன் நடித்த இளம் நடிகைக்கு அஞ்சலி செலுத்தியது.
ஜியா கதாபாத்திரத்தின் மூலம், ஹாலிவுட்டில் காது கேளாதோரின் பிரதிநிதித்துவத்தை வலுப்படுத்திய நடிகையாக கெய்லி ஹாட்டில் பரவலாகப் பாராட்டப்பட்டார்.





