
‘ஜுராசிக் பார்க்’, ‘தி பியானோ’ உள்ளிட்ட பல புகழ்பெற்ற திரைப்படங்களில் நடித்த, நியூசிலாந்தின் பிரபல நடிகர் சாம் நீல், 78 ஆவது வயதில் காலமானார்.
அவரது மறைவு குறித்து அவரது குடும்பத்தினர், திங்கள்கிழமை அவரது அதிகாரப்பூர்வ Instagram கணக்கின் மூலம் அறிவித்தனர். மரணத்திற்கான காரணம் வெளியிடப்படவில்லை. இருப்பினும், 2022ஆம் ஆண்டு மூன்றாம் நிலை ‘Angioimmunoblastic T-cell Lymphoma’ எனப்படும் அரிய வகை இரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர், அண்மையில் புற்றுநோயிலிருந்து முழுமையாக மீண்டிருந்ததாக தெரிவித்திருந்தார்.
குடும்பத்தினர் வெளியிட்ட அறிக்கையில், “ஜூலை 13ஆம் தேதி ஆஸ்திரேலியாவின் சிட்னியில், குடும்பத்தினரின் மத்தியில் அமைதியாக அவர் உயிரிழந்தார். வாழ்நாள் முழுவதும் காட்டிய கண்ணியத்துடனேயே அவர் இறுதி மூச்சை விட்டார். அவரது மறைவு திடீரெனவும் எதிர்பாராத விதமாகவும் நிகழ்ந்தாலும், புற்றுநோயின்றி வாழ்ந்த நிலையில் அவர் பிரிந்தது ஒரு ஆறுதலாக உள்ளது” என்று தெரிவித்துள்ளனர்.
மேலும், சிகிச்சை அளித்த St Vincent’s Private Hospital மருத்துவக் குழுவினருக்கு குடும்பத்தினர் நன்றியையும் தெரிவித்ததுடன், இந்த துயரமான நேரத்தில் தங்களின் தனியுரிமையை மதிக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளனர்.
ஆஸ்திரேலிய பிரதமர் ஆந்தனி அல்பனீஸ், “சாம் நீல் ஆஸ்திரேலியர்களின் மனதில் அழியாத இடத்தைப் பெற்ற நடிகர். அவரது நகைச்சுவை உணர்வு, அமைதியான ஆளுமை மற்றும் கண்ணியமான வாழ்க்கை என்றும் நினைவுகூரப்படும்” என்று இரங்கல் தெரிவித்துள்ளார்.
1947ஆம் ஆண்டு வட அயர்லாந்தின் ஓமாக் நகரில் பிறந்த சாம் நீலின் இயற்பெயர் நைஜல் ஜான் டெர்மட் நீல். 1954ஆம் ஆண்டு அவரது குடும்பம் நியூசிலாந்துக்கு குடிபெயர்ந்தது. பின்னர் 12 வயதில் ‘நைஜல்’ என்பதற்குப் பதிலாக ‘சாம்’ என்ற பெயரைத் தேர்ந்தெடுத்தார்.
சட்டப்படிப்பை கைவிட்ட பிறகு நடிப்புத் துறையில் நுழைந்த அவர், 1977ஆம் ஆண்டு ‘Sleeping Dogs’ திரைப்படத்தின் மூலம் கவனம் பெற்றார். தொடர்ந்து My Brilliant Career, Omen III, Possession, Evil Angels, The Hunt for Red October உள்ளிட்ட படங்களில் நடித்தார்.
1993ஆம் ஆண்டு வெளியான ‘The Piano’ மற்றும் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் இயக்கிய ‘Jurassic Park’ திரைப்படங்களில் நடித்ததன் மூலம் உலகப் புகழ் பெற்றார். குறிப்பாக டாக்டர் ஆலன் கிராண்ட் கதாபாத்திரத்தில் நடித்தது அவரது வாழ்க்கையின் மிக முக்கியமான திருப்புமுனையாக அமைந்தது. பின்னர் Jurassic Park III மற்றும் Jurassic World Dominion படங்களிலும் அதே கதாபாத்திரத்தில் மீண்டும் நடித்தார்.
ஐந்து தசாப்தங்களுக்கு மேலான தனது திரையுலகப் பயணத்தில் 150-க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி தயாரிப்புகளில் நடித்துள்ளார். Peaky Blinders, The Tudors, The Simpsons, Rick and Mortyஉள்ளிட்ட தொடர்களிலும் குறிப்பிடத்தக்க வேடங்களில் தோன்றினார்.
2023ஆம் ஆண்டு வெளியிட்ட தனது சுயசரிதை “Did I Ever Tell You About This?” நூலில், புற்றுநோய்க்காக ஒரு ஆண்டுக்கும் மேலாக கீமோதெரபி சிகிச்சை பெற்றதாக அவர் பகிர்ந்திருந்தார். நோய் கட்டுப்பாட்டுக்குள் வந்திருந்தாலும், வாழ்நாள் முழுவதும் மாதந்தோறும் சிகிச்சை பெற்று வந்தார்.
அப்போது அவர் கூறியிருந்தது:
“எனக்கு மரணத்தைப் பற்றிப் பயமில்லை. ஆனால் இன்னும் பத்து அல்லது இருபது ஆண்டுகள் வாழ விரும்புகிறேன். என் பேரக்குழந்தைகள் வளர்வதையும், நான் உருவாக்கிய அனைத்தும் முழுமையடைவதையும் பார்க்க வேண்டும்.”
நடிப்புத் துறைக்கான பங்களிப்புக்காக 1991ஆம் ஆண்டு பிரிட்டிஷ் பேரரசின் அதிகாரி (OBE) விருதும், 2007ஆம் ஆண்டு நியூசிலாந்தின் உயரிய விருதுகளில் ஒன்றான Distinguished Companion of the New Zealand Order of Merit விருதும் வழங்கப்பட்டன. பின்னர் 2022ஆம் ஆண்டு ‘சர்’ (Sir) என்ற பட்டத்தையும் பெற்றார்.
சாம் நீலுக்கு நான்கு பிள்ளைகளும், ஆறு பேரக்குழந்தைகளும் உள்ளனர். அவரது மறைவு, உலகத் திரைப்படத் துறைக்கு ஈடு செய்ய முடியாத இழப்பாகக் கருதப்படுகிறது.





