சுவிஸ்

PFAS அச்சம்: எதிர்காலம் தெரியாமல் தவிக்கும் சென் காலன் விவசாயிகள்

சென் காலன் மாநிலத்தில் (St. Gallen) உள்ள விவசாயக் குடும்பங்கள் இப்போது வெளிப்படையாகப் பேச ஆரம்பித்திருக்கிறார்கள். தங்கள் பண்ணையில் PFAS ரசாயனம் கலந்திருப்பதால், பண்ணையைத் தொடர்ந்து நடத்த முடியுமா என்று அவர்களுக்குத் தெரியவில்லை.

PFAS என்பது “அழியாத ரசாயனங்கள்” என்று அழைக்கப்படும் செயற்கை ரசாயனங்கள். துணிகள், உணவுப் பொதிகள், தீயணைப்பு நுரை போன்றவற்றில் இவற்றைப் பல ஆண்டுகளாகப் பயன்படுத்துகிறார்கள். இவை எளிதில் அழியாது. மண்ணிலும் விலங்குகளின் உடலிலும் சேர்ந்துகொண்டே இருக்கும்.

எக்கர்ஸ்ரீட் (Eggersriet) ஊரில் கிராஃப் குடும்பம் நான்காவது தலைமுறையாகப் பண்ணை நடத்துகிறது. 2021-ல் அவர்கள் பண்ணையில் PFAS இருப்பது தெரிய வந்தது. அதிலிருந்து குடும்பத்துக்குப் பெரிய மன அழுத்தம். சாப்பிடும் நேரத்திலும் “அடுத்து என்ன செய்வது?” என்பதுதான் பேச்சு.

இறைச்சியில் PFAS அளவு அதிகமாக இருந்தால் அதை விற்கக் கூடாது என்று சுவிஸ் சட்டம் சொல்கிறது. இந்த விதியை மற்ற மாநிலங்களை விட சென் காலன் கடுமையாக நடைமுறைப்படுத்துகிறது. அதனால் மாநில விவசாயிகள் சங்கம் கோபமாக இருக்கிறது. நாடு முழுவதற்குமான தீர்வு வரும்வரை மாநிலம் காத்திருக்க வேண்டும் என்று அது கேட்கிறது. மாநில அமைச்சர் புருனோ டாமன் (Bruno Damann) விவசாயிகளின் கவலையைப் புரிந்துகொள்வதாகச் சொல்கிறார். ஆனால் எல்லை அளவுகளை நிர்ணயிப்பது மத்திய அரசு என்பதால், சட்டத்தைப் பின்பற்றியே ஆக வேண்டும் என்கிறார்.

பாதிக்கப்பட்ட பண்ணைகளுக்காக மாநிலம் 10 மில்லியன் பிராங்க் ஒதுக்குகிறது. இறைச்சியைச் சாப்பிட முடியாத பசுக்களை மாநிலம் வாங்கி அழிக்கிறது. ஆனால் இது நீண்டகாலத் தீர்வு இல்லை என்று விவசாயிகள் சொல்கிறார்கள். காரணம், PFAS முக்கியமாக மண்ணில்தான் இருக்கிறது. இழப்பீடு கிடைக்குமா என்பதும் இன்னும் முடிவாகவில்லை.

பெர்னில் உள்ள நாடாளுமன்ற மேலவை ஒரு தீர்மானத்தை ஏற்றுக்கொண்டிருக்கிறது. தெளிவான சட்டங்களையும் உதவித் திட்டத்தையும் முதலில் உருவாக்க வேண்டும், அதன் பிறகுதான் விற்பனைக்குத் தடை போட வேண்டும் என்பது அதன் கோரிக்கை. இதே போன்ற தீர்மானம் கீழவையிலும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அது இன்னும் விவாதிக்கப்படவில்லை.


மூலம்: SRF
புகைப்படம்: David Dolenc / Unsplash

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button