
வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகர படுகொலை தொடர்பாக நாடாளுமன்றத்தில் இன்று கடுமையான வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றன.
இதன்போது, எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபாலவை நோக்கி ஆவேசமாக கருத்துகளை வெளியிட்டார்
வெலிகம பிரதேச சபைத் தலைவர் படுகொலைக்குக் காரணமானவர்கள் இரண்டு அல்லது மூன்று நாட்களில் கைது செய்யப்படுவார்கள் என்று அமைச்சர் விஜேபால கூறிய கருத்துக்குப் பதிலளிக்கும் விதமாகவே அவர் இவ்வாறு பேசியுள்ளார்.
படுகொலை செய்யப்பட்ட லசந்த விக்ரமசேகரவை ‘திட்டமிட்ட குற்றக்குழுவை சேர்ந்தவர்’ என்று அமைச்சர் கூறுவதைக் கண்டித்த சாமர சம்பத் தசநாயக்க அவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் என்றும், அரசியல் காரணங்களுக்காகக் கொல்லப்பட்டிருக்கலாம் என்றும் கூறினார்.
அத்துடன் அமைச்சர் விஜேபாலவின் கடந்தகால காவல்துறை பின்னணியை சுட்டிக்காட்டிய அவர். அமைச்சர் 1988 ஆம் ஆண்டில் காவல்துறையில் இணைந்தபோது, புலனாய்வு அறிக்கை காரணமாகத் “தீவிரவாதக் குழுவின் தலைவர்” என்ற குற்றச்சாட்டில் காவல்துறையில் இருந்து நீக்கப்பட்டவர் என்று அவர் குற்றம் சாட்டினார்.
அமைச்சர் தமது வரலாறை மறைத்து, வெலிகம பிரதேச சபை தலைவரைக் குற்றக்குழுவுடன் தொடர்புபடுத்துவது தவறு என்றும் அவர் கூறினார்.
புலனாய்வு பிரிவின் அறிக்கைகளால் விரட்டப்பட்ட ஒருவரே இன்று காவல்துறைக்கு பொறுப்பான அமைச்சராக உள்ளார்.
இன்று நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பும் விலக்கப்பட்டுள்ளது. “காவல்துறைக்குப் பொறுப்பான அமைச்சரே, முடிந்தால் எங்களைக் கொல்லுங்கள். கொன்றால், ஆவியாக வந்து உங்களைப் பழி தீர்ப்போம்” என்றும் அவர் சவால் விடுத்தார்.
படுகொலையாளியைக் கைது செய்து, இந்தக் கொலைக்குப் பின்னால் அரசியல் இல்லை, அது குற்றக்குழுவுடன் தொடர்புடைய சம்பவம் தான் என்று பகிரங்கமாக அறிவிக்க முடியுமா என்றும் சாமர சம்பத் தசநாயக்க, அமைச்சருக்குச் சவால் விடுத்தார்.
இதற்கு பதிலளிக்கும் வகையில் கருத்து தெரிவித்த அமைச்சர் ஆனந்த விஜேபால, நாடாளுமன்ற உறுப்பினரின் அனைத்துக் குற்றச்சாட்டுகளும் “முற்றிலும் பொய்யானவை என்றும் தீங்கிழைக்கும் உள்நோக்கம் கொண்டவை” என்றும் மறுத்தார்.
நாங்கள் மக்களைக் கொல்லும் அரசாங்கம் அல்ல, மக்களைப் பாதுகாக்கும் அரசாங்கம் சாமர சம்பத் தசநாயக்க பயப்படத் தேவையில்லை என்றும், அவரது பாதுகாப்புக்கு நாங்கள் உத்தரவாதம் அளிக்கிறோம் என்றும் அமைச்சர் கூறினார்.
சட்டத்தைப் பாதுகாக்கும் ஒரு நேர்மையான சமுதாயத்தை நாங்கள் உருவாக்குவோம் என்றும், சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடும் அனைவரும் நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள் என்றும் அமைச்சர் உறுதியளித்தார்.





