அரசியல்இலங்கை

இலங்கையில் மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடத்த இந்தியா வலியுறுத்து

இலங்கையில் நீண்ட காலமாக ஒத்திவைக்கப்பட்டுள்ள மாகாண சபைத் தேர்தல்களை விரைவில் நடத்துமாறும், தமிழர் சமூகத்தின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில் அரசியலமைப்புச் சட்டத்தின் தொடர்புடைய பிரிவுகளை முழுமையாக அமல்படுத்துமாறும் இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி இலங்கையிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சு அறிக்கையொன்றை விடுத்து இதனை தெரிவித்துள்ளது.

உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்த இந்திய வௌியுறவுத்துறை செயலாளர் ஜனாதிபதி, பிரதமர், வௌிவிவகார அமைச்சர் எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் சிறுபான்மை கட்சிகளின் தலைவர்களையும் சந்தித்து கலந்துரையாடிருந்தார்.

இந்நிலையில் அவரது இந்த விஜயத்தின் போது, மாகாண சபைத் தேர்தல்களை விரைவில் நடத்துவதற்கான தமது வாக்குறுதியை நிறைவேற்றுமாறு அரசாங்கத்திடம் கோரியதுடன் தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளைத் தீர்ப்பதற்கு அரசியலமைப்பு ஏற்பாடுகளை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறும் வலியுறுத்தினார்.

அத்துடன் பெருந்தோட்டத் துறைக்கான வீடமைப்புத் திட்டம் தொடர்பில் உரையாற்றிய மிஸ்ரி, இந்திய வீடமைப்புத் திட்டத்தின் நான்காம் கட்டத்தின் கீழான பணிகளை, குறிப்பாக 2017 ஆம் ஆண்டில் இந்திய வம்சாவளித் தமிழ் (IOT) சமூகத்திற்காக வாக்குறுதியளிக்கப்பட்ட 10,000 வீடுகளை நிர்மாணிக்கும் பணிகளைத் மேலும் துரிதப்படுத்துமாறு இலங்கை அதிகாரிகளிடம் வலியுறுத்தியுள்ளார்.

நீண்டகாலமாக நிலவி வரும் மீனவர் பிரச்சினை தொடர்பிலும் இந்த சந்திப்பின் போது கவனம் செலுத்தப்பட்டது.

இலங்கை சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களையும் அவர்களது படகுகளையும் முன்கூட்டியே விடுவிப்பதற்கு இலங்கையின் ஒத்துழைப்பைக் கோரியதுடன், வாழ்வாதாரத் தேவைகளை அடிப்படையாகக் கொண்ட ஒரு மனிதாபிமான அணுகுமுறையையும் கையாளுமாறு அவர் கோரியுள்ளார்.

அதேநேரம் இந்தியாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் எந்தவொரு வகையிலும் இலங்கை நிலப்பரப்பைப் பயன்படுத்த அனுமதிக்கப் போவதில்லை என 2024 டிசம்பர் மாத கூட்டு அறிக்கையில் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க அளித்திருந்த உத்தரவாதங்களையும் அவர் இதன்போது வரவேற்றார்.

இரு நாட்டு மக்களினதும் பாதுகாப்பு மற்றும் சுபீட்சம் குறித்த அபிலாஷைகளை நிறைவேற்றும் வகையில், இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் பரஸ்பர நன்மையளிக்கும் வகையிலான விரிவான அபிவிருத்திப் பங்காளித்துவத்தைக் கட்டியெழுப்புவதற்கு இது வலுவான அடித்தளத்தை வழங்குகிறது என்பதையும் அவர் இந்த விஜயத்தின் போது சுட்டிக்காட்டியுள்ளதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் 2024 டிசம்பர் மாத விஜயத்தின் போது ஏற்படுத்தப்பட்ட தொலைநோக்குப் பார்வையை நடைமுறைப்படுத்துவதற்கும், பிரதமர் மோடியின் 2025 ஏப்ரல் மாத விஜயத்தின் போது முறைமைப்படுத்தப்பட்ட இருதரப்பு ஒப்பந்தங்களை அமுல்படுத்துவதற்குமான இந்தியாவின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பை இந்த உத்தியோகபூர்வ விஜயம் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளதாகவும் இந்திய வௌியுறவுத் துறை அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button