
குழந்தைகளுக்கு Instagram மற்றும் Facebook ஏற்படுத்தும் பாதிப்புகளுக்கு Meta நிறுவனத்தைப் பொறுப்பேற்கச் செய்யும் நோக்கில் தொடரப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த வழக்கின் விசாரணை அமெரிக்காவின் கலிபோர்னியாவில் இன்று (ஆகஸ்ட் 18) ஆரம்பமாகிறது.
California, Colorado, Kentucky மற்றும் New Jersey ஆகிய நான்கு மாநிலங்கள் Meta நிறுவனம் Instagram மற்றும் Facebook தளங்களின் பாதுகாப்பு குறித்து பொதுமக்களை தவறாக வழிநடத்தியதாகவும், சிறார்களை அதிக நேரம் பயன்படுத்தச் செய்யும் வகையில் செயலிகளை திட்டமிட்டு அடிமையாக்கும் அம்சங்களை உருவாக்கியதாகவும் குற்றம்சாட்டியுள்ளன.
மேலும், 13 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் பெற்றோரின் அனுமதியின்றி அவர்களது தரவுகளை தொடர்ந்து சேகரிப்பதன் மூலம் தனியுரிமைச் சட்டங்களை Meta மீறுவதாகவும் மாநிலங்களின் வழக்கறிஞர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
இந்த வழக்கில் மாநிலங்கள் சுமார் 200 பில்லியன் அமெரிக்க டொலர் இழப்பீடு மற்றும் Meta-வின் முக்கிய சமூக ஊடக தளங்களில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை கோருகின்றன.
2023ஆம் ஆண்டு Meta நிறுவனத்தின் செயலிகளில் பயனர்களை அடிமையாக்கும் அம்சங்கள் திட்டமிட்டு உருவாக்கப்பட்டதாகக் கூறி வழக்குத் தொடர்ந்த 29 மாநிலங்களைக் கொண்ட கூட்டணியின் ஒரு பகுதியாக இந்த நான்கு மாநிலங்களும் உள்ளன.
விசாரணையில் என்ன நடக்கும்?
California, Oakland நகரில் உள்ள மத்திய நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை ஆரம்ப வாதங்கள் தொடங்க உள்ளன.
Meta நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஸக்கர்பெர்க் உள்ளிட்ட முக்கிய சாட்சிகள் நீதிமன்றத்தில் சாட்சியமளிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
Meta நிறுவனத்தின் முன்னாள் ஊழியரும் நிபுணர் சாட்சியுமான Arturo Bejar-ம் சாட்சியமளிக்க உள்ளார். அவரது சாட்சியத்தைத் தடுக்க Meta முயற்சி செய்திருந்த போதிலும், அவர் நீதிமன்றத்தில் ஆஜராக வாய்ப்புள்ளது.
நீதிமன்ற ஆவணங்களின்படி, Meta-வின் பாதுகாப்பு நடைமுறைகள் மற்றும் நிறுவனம் தனக்குத் தெரிந்த தகவல்களைப் பொதுமக்களிடம் தவறாகக் கூறியதா என்பது குறித்து மாநிலங்களின் வழக்கறிஞர்கள் அவரிடம் சுமார் 3 மணி நேரம் விசாரணை நடத்தவுள்ளனர்.
எட்டு பேர் கொண்ட ஆலோசனை ஜூரி பணியாற்றினாலும், வழக்கின் இறுதி தீர்ப்பு நீதிபதி Yvonne Gonzalez Rogersவசமே உள்ளது.
இருதரப்பினரும் கூறுவது என்ன?
Kentucky மாநில சட்டமா அதிபர் Russell Coleman, இந்த வழக்கை “அமெரிக்க வரலாற்றிலேயே மிகப்பெரிய நுகர்வோர் பாதுகாப்பு வழக்கு” என வர்ணித்துள்ளார்.
இளைஞர்களுக்கு தனது தயாரிப்புகள் ஏற்படுத்தும் பாதிப்புகள் குறித்து Meta அறிந்திருந்தும், அதிக லாபத்திற்காக அவற்றைப் புறக்கணித்ததை நிரூபிப்போம் என அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கு Meta நிறுவனம் குற்றச்சாட்டுகளை முற்றிலும் மறுத்துள்ளது.
இளைஞர்களைப் பாதுகாப்பதற்காக தங்களது தளங்களில் பல ஆண்டுகளாக பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும், இந்த வழக்குகள் தொடரப்படுவதற்கு முன்பே அதற்கான பணிகளைத் தொடங்கியிருந்ததாகவும் Meta தெரிவித்துள்ளது.
இந்த வழக்கு 6 முதல் 8 வாரங்கள் வரை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அக்டோபர் மாதத்திற்குள் தீர்ப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.





