
இலங்கை தனது புதிய அன்னாசிப்பழங்களின் முதல் தொகுதியை பாகிஸ்தானுக்கு ஏற்றுமதி செய்துள்ளது. இதன் மூலம் இலங்கையின் விவசாய ஏற்றுமதியில் புதிய மைல்கல் ஏற்பட்டுள்ளதுடன், புதிய வெளிநாட்டு சந்தைக்கான வாய்ப்பும் திறக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் விளைவிக்கப்படும் புதிய அன்னாசிப்பழங்களின் (Ananas comosus) முதல் 20 அடி கொள்கலன் இன்று (21) ஏற்றுமதிக்காகப் பொதியிடப்பட்டது. இந்த ஏற்றுமதியை C R Exports (Pvt) Ltd நிறுவனம் மேற்கொண்டுள்ளது.
இலங்கை மற்றும் பாகிஸ்தானின் தேசிய தாவரப் பாதுகாப்பு அமைப்புகள் (NPPOs) இடையே நடைபெற்ற தொழில்நுட்ப கலந்துரையாடல்கள் மற்றும் ஒத்துழைப்பின் மூலம், புதிய அன்னாசிப்பழங்களை பாகிஸ்தான் சந்தைக்கு ஏற்றுமதி செய்வதற்குத் தேவையான தாவர சுகாதார (phytosanitary) ஏற்பாடுகள் உருவாக்கப்பட்டன.
இந்த ஏற்றுமதியைச் சாத்தியமாக்குவதில் இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபை (EDB), பாகிஸ்தானிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம், இலங்கையிலுள்ள பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயம், வர்த்தகத் திணைக்களம், விவசாயத் திணைக்களம் (DoA) மற்றும் தேசிய தாவரத் தனிமைப்படுத்தல் சேவை (NPQS) ஆகியவை இணைந்து செயல்பட்டன.
சுமார் 252 மில்லியன் மக்கள் தொகையைக் கொண்ட பாகிஸ்தான், இலங்கை அன்னாசிப்பழங்களுக்கு அதிக வாய்ப்புள்ள சந்தையாகக் கருதப்படுகிறது. அந்நாடு ஆண்டுதோறும் சுமார் 2,000 முதல் 5,000 மெட்ரிக் டன் அன்னாசிப்பழங்களை இறக்குமதி செய்கிறது. இதன் மதிப்பு சுமார் 10 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஆகும்.
தற்போது பாகிஸ்தான் சந்தைக்கு அன்னாசிப்பழங்களை வழங்கும் முக்கிய நாடுகளில் தாய்லாந்து மற்றும் பிலிப்பைன்ஸ் இடம்பெறுகின்றன. இலங்கை அன்னாசிப்பழங்களின் தரம், புத்துணர்ச்சி, தனித்துவமான சுவைமற்றும் இரு நாடுகளுக்கும் இடையிலான புவியியல் நெருக்கம் ஆகிய காரணங்களால் பாகிஸ்தான் சந்தையில் இலங்கைக்கு அதிக பங்கு கிடைக்கும் என அதிகாரிகள் எதிர்பார்க்கின்றனர்.
ஒப்புதல் நடைமுறையின் ஒரு பகுதியாக, பாகிஸ்தானின் தேசிய தாவரப் பாதுகாப்பு அமைப்புடன் இணைந்த பூச்சியியல் ஆய்வாளர் மொஹமட் அகீத், இலங்கைக்கு வந்து தேர்ந்தெடுக்கப்பட்ட அன்னாசி பயிரிடும் பகுதிகள் மற்றும் பொதியிடும் நிலையங்களை ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வுகளின் தகவல்கள் மற்றும் கண்டறிதல்களின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட தொழில்நுட்ப மதிப்பீட்டுக்குப் பின்னர், NPQS வழங்கும் தாவர சுகாதாரச் சான்றிதழுடன், இலங்கையிலிருந்து புதிய அன்னாசிப்பழங்களை இறக்குமதி செய்ய பாகிஸ்தான் அதிகாரிகள் அனுமதி வழங்கினர்.
இலங்கையிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் அனைத்து அன்னாசிப்பழங்களும் நல்ல விவசாய நடைமுறைகள் (GAP)அடிப்படையில் சான்றளிக்கப்பட்ட பண்ணைகளிலிருந்து பெறப்பட வேண்டும். அதேவேளை, சம்பந்தப்பட்ட உற்பத்தியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் விவசாயத் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும்.
2025ஆம் ஆண்டில் இலங்கை அன்னாசிப்பழம் சார்ந்த பொருட்களின் ஏற்றுமதி மூலம் சுமார் 2 மில்லியன் அமெரிக்க டொலர்களை வருமானமாகப் பெற்றுள்ளது. பாகிஸ்தான் போன்ற புதிய சந்தைகளை அடையாளம் கண்டு அபிவிருத்தி செய்வது, விவசாய ஏற்றுமதியை விரிவுபடுத்தவும் 2030ஆம் ஆண்டுக்கான ஏற்றுமதி இலக்குகளை அடையவும் முக்கியமானதாக இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், அவகாடோ மற்றும் ஆரஞ்சு உள்ளிட்ட ஏனைய விவசாயப் பொருட்களையும் பாகிஸ்தான் சந்தைக்கு அறிமுகப்படுத்துவதற்கான வாய்ப்புகளை ஆராயும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.
இந்த புதிய ஏற்றுமதி வாய்ப்பு, பாகிஸ்தான்–இலங்கை சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தின் (PSFTA) மூலம் இலங்கை அதிகபட்ச பயனைப் பெறுவதற்கும், இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக மற்றும் பொருளாதார உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.





