இலங்கை

கிளிநொச்சியில் LTTE பயிற்சி முகாம்? – விசாரணையில் அதிர்ச்சி தகவல்கள்

கிளிநொச்சி, பளை பகுதியில் LTTE பயிற்சி முகாம் கண்டுபிடிக்கப்பட்டதாக ஊடக சந்திப்பில் தெரிவித்த நபரின் கூற்றில் எந்த ஆதாரமும் இல்லை என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

அமைச்சரின் கூற்றுப்படி, குறித்த நபர் சங்கீத் ஜயசேகர என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், போரலஸ்கமுவைச் சேர்ந்தவர். அவர் கைது செய்யப்பட்டு 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

விசாரணைகளில், அவரிடம் இரண்டு போலி அடையாள அட்டைகள் இருந்ததும், ஏழு வெவ்வேறு முகவரிகளைபயன்படுத்தியதும் தெரியவந்ததாக அமைச்சர் கூறினார். மேலும், மோசடி உள்ளிட்ட மூன்று தனித்தனி குற்ற வழக்குகளில் அவர் சந்தேகநபராக குறிப்பிடப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர் மருத்துவர் எனவும் போலியாக அடையாளப்படுத்திக் கொண்டிருந்ததாக அமைச்சர் மேலும் தெரிவித்தார். சில அமைச்சரவை பணியாளர்களுடன் ஆலோசகராகவும் அவர் பணியாற்றியிருந்ததாகவும், அந்த நியமனங்கள் தொடர்பிலும் விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் கூறினார்.

இதற்கிடையில், குறித்த இடத்தில் அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணையில், அது LTTE பயிற்சி முகாமாக பயன்படுத்தப்பட்டதற்கான எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை என்றும், அந்த இடம் விவசாய நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்பட்டு வந்ததாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

இந்த விவகாரத்தை பயன்படுத்தி மக்களிடையே பிளவை ஏற்படுத்தும் நோக்கில் குறித்த நபர் வேண்டுமென்றே பொதுமக்களை தவறாக வழிநடத்தியதாக அமைச்சர் குற்றம்சாட்டினார்.

அமைச்சரவைப் பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸவும், அந்த இடம் கிளிநொச்சி மாவட்டத்தின் கண்ணகிபுரம்–முக்கன்பம் பகுதியில், 1919ஆம் ஆண்டு வனப் பாதுகாப்புப் பகுதியாக வர்த்தமானியில் அறிவிக்கப்பட்ட காணியில் அமைந்துள்ளதாகத் தெரிவித்தார்.

அங்கு சட்டவிரோதமாக காணி ஆக்கிரமித்தல், அனுமதியற்ற கட்டுமானம், பயிர்ச்செய்கை மற்றும் மணல் அகழ்வு தொடர்பாகவே பிரச்சினை நிலவுவதாகவும், LTTE பயிற்சி முகாம் இயங்கியதாக அல்ல என்றும் அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது.

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button