
யாழ்ப்பாணம் சித்துபாத்தி செம்மணி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழிகள் தொடர்பில் தேவையான சந்தர்ப்பத்தில் ஒத்துழைப்புக்கள் பெற்றுக்கொள்ளப்படும். பாதிக்கப்பட்டோருக்கு நீதி கிடைக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உறுதியாகவுள்ளோம் என வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித்த ஹேரத் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இன்று (08) வியாழக்கிழமை நடைபெற்ற அமர்வில் நிலையியல் கட்டளை இருபத்தேழு இரண்டின் கீழ் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,
செம்மணி மனித புதைகுழி மட்டுமன்றி ஏனைய மனித புதைகுழிகள் தொடர்பிலும் அகழ்வு பணிகள் சிறந்த முறையில் முன்னெடுக்கப்படுகின்றன. நீதிமன்றத்தின் கண்காணிப்பிலேயே அந்தப் பணிகள் இடம்பெறுகின்றன. அந்த விடயத்தில் சர்வதேச விசேட நிபுணர்களின் உதவிகளை பெற்றுக்கொள்வதற்கு ஏற்கனவே இணக்கம் தெரிவித்துள்ளோம்.
ஒத்துழைப்புக்களை பெற்றுக்கொள்வதற்கு நாங்கள் நடவடிக்கை எடுப்போம். எவ்வாறாயினும் செம்மணியில் தொடர்ந்தும் அகழ்வுப் பணிகள் நடக்கின்றன.
இந்தப் பணிகள் முடிவடைந்த பின்னர் தேவையேற்படும் போது, டி.என்.எ பரிசோதனை தொடர்பான அறிக்கைகளை பெற்றுக்கொள்ளவும் மற்றும் காலங்கள் தொடர்பான விபரங்களை பெற்றுக்கொள்ளவும் விசேட நிபுணர்களின் உதவிகளை பெற்றுக்கொள்ள நாங்கள் நடவடிக்கை எடுப்போம் என்றார்.





