
இலங்கை விஞ்ஞானி தேமிய நாணயக்கார , சுமார் 10 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் உருவான விண்வெளியில் இருந்து வெளியான, இதுவரை பதிவுசெய்யப்பட்ட மிகப் பழமையான அதிவேக வானொலி வெடிப்பைக் (Fast Radio Burst – FRB) கண்டறிந்த சர்வதேச ஆய்வுக் குழுவில் இடம்பெற்றுள்ளார்.
விண்வெளியில் இருந்து வரும் மர்மமான மற்றும் சக்திவாய்ந்த ரேடியோ அலைகள், “அதிவேக ரேடியோ வெடிப்புகள்” (FRB) என அழைக்கப்படுகின்றன.
இந்த முக்கிய கண்டுபிடிப்பு, Science என்ற சர்வதேச அறிவியல் இதழில் வெளியிடப்பட்டுள்ளது. இது பிரபஞ்சத்தின் பரிணாம வளர்ச்சியையும், அதில் காணப்படும் பொருட்களின் பரந்த கட்டமைப்பான அண்ட வலைப்பின்னலையும் (Cosmic Web) புரிந்துகொள்வதற்கு உதவக்கூடும் என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
அவுஸ்திரேலியாவின் சிட்னி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த வானியற்பியல் விஞ்ஞானி கலாநிதி மனிஷா கலேப் தலைமையிலான ஆய்வுக் குழுவில் தேமிய நாணயக்கார இணை ஆசிரியராகப் பங்களித்துள்ளார்.
FRB 20240304B எனப் பெயரிடப்பட்ட இந்த வானொலி வெடிப்பு, 2024ஆம் ஆண்டு தென்னாபிரிக்காவில் அமைந்துள்ள MeerKAT வானொலித் தொலைநோக்கி மூலம் முதன்முதலில் பதிவுசெய்யப்பட்டது.
இதனை அடுத்து, அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவின் ஜேம்ஸ் வெப் விண்வெளித் தொலைநோக்கியைப் பயன்படுத்தி விஞ்ஞானிகள் அந்தச் சமிக்ஞையின் மூலத்தைக் கண்டறிந்தனர்.
இந்தச் சமிக்ஞை, பெருவெடிப்பு நிகழ்ந்து சுமார் 300 கோடி ஆண்டுகள் கடந்திருந்த காலத்தில் காணப்பட்ட, தீவிரமாகப் புதிய விண்மீன்களை உருவாக்கிக்கொண்டிருந்த சிறிய விண்மீன் மண்டலத்திலிருந்து வந்துள்ளதாக ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
வேகமான வானொலி வெடிப்புகள் என்பது சில மில்லி விநாடிகள் மட்டுமே நீடிக்கும், மிக அதிக ஆற்றலைக் கொண்ட வானொலி அலைகளின் திடீர் வெடிப்புகளாகும். இவை மிகக் குறுகிய காலத்திற்கே நீடித்தாலும், பல நாட்களில் சூரியன் வெளியிடும் ஆற்றலுக்கு இணையான ஆற்றலை வெளியிடக்கூடும்.
இத்தகைய வெடிப்புகள், மிக வலுவான காந்தப்புலங்களைக் கொண்ட நியூட்ரான் விண்மீன்களான மக்னெற்றார்கள் மூலம் உருவாகலாம் என விஞ்ஞானிகள் கருதுகின்றனர். எனினும், இவற்றின் துல்லியமான தோற்றம் இன்னும் முழுமையாகத் தெளிவுபடுத்தப்படவில்லை.





