சுவிஸ்

போனும் இணையமும் ஆயுதமாகும் போது: பெண்களை குறிவைக்கும் டிஜிட்டல் வன்முறை

சுவிஸ் முழுவதும் “பெண்களுக்கு எதிரான வன்முறைக்கு எதிராக 16 நாட்கள்” என்ற பிரச்சாரம் நடந்து வருகிறது. இந்த ஆண்டு அதன் முக்கிய தலைப்பு டிஜிட்டல் வன்முறை.

இணையத்தில் வெறுப்புக் கருத்துகள் எழுதுவது, AI மூலம் போலியான ஆபாசப் படங்கள் (டீப்ஃபேக்) உருவாக்கி பரப்புவது எல்லாம் இதில் அடங்கும். சுவிஸ்ஸில் பாலியல் தொடர்பான இணையக் குற்றங்களில் ஆண்களை விட பெண்களும் பெண் பிள்ளைகளும் இரு மடங்கு அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள் என்று குற்றப் புள்ளிவிவரம் சொல்கிறது. ஆனால் டீப்ஃபேக்குக்கு என்று தனிச் சட்டம் சுவிஸ்ஸில் இல்லை. AI நிறுவனங்களோ, இவற்றைப் பரப்பும் தளங்களோ பொறுப்பேற்க வேண்டிய நிலையும் இல்லை.

கணவன் மனைவி உறவிலும், பிரிந்த பிறகும் இது நடக்கிறது. ஒருவரை கண்காணிக்க ஒற்று பார்க்கும் ஆப், மறைத்து வைத்த சிறு கேமரா, GPS டிராக்கர் பயன்படுத்தப்படுகின்றன. ஏர்டேக் (Airtag) கருவியை பையிலோ ஜாக்கெட்டிலோ தைத்து வைத்து விடுவார்கள். குழந்தையின் டெடி பியருக்குள் தைத்து, அம்மா எங்கே போகிறார் என்று பின்தொடர்ந்த சம்பவங்களும் உண்டு. இணைக்கப்பட்ட இமெயில் கணக்குகள் மூலமும் இருப்பிடம் தெரிந்துவிடும். பலர் இதை நீண்ட நாள் கழித்துத்தான் கண்டுபிடிக்கிறார்கள்.

உங்களை யாரோ கண்காணிக்கிறார்கள் என்று சந்தேகம் வந்தால், உடனே போனில் மாற்றங்கள் செய்ய வேண்டாம் என்கிறார்கள் நிபுணர்கள். அது மற்றவருக்கு தெரிந்து வன்முறை கூடிவிடலாம். முதலில் பாதிக்கப்பட்டோருக்கான உதவி மையத்தை (Opferhilfe) தொடர்பு கொள்ளுங்கள். 142 என்ற எண் சுவிஸ் முழுவதும் 24 மணி நேரமும் இயங்குகிறது. அழைப்பு இலவசம், பெயர் சொல்ல வேண்டியதில்லை. digital-violence.info இணையதளத்திலும் உதவிக் குறிப்புகள் உள்ளன.

பிரச்சாரத்தின் போது ஜெனீவா (Genève) முதல் செங்காலன் (St. Gallen), லூகானோ (Lugano) வரை பல அமைப்புகள் திரைப்படக் காட்சிகள், பயிலரங்குகள், கண்காட்சிகள் நடத்துகின்றன. டிஜிட்டல் வன்முறையை அரசு அங்கீகரிக்க வேண்டும், அதைப் புள்ளிவிவரத்தில் பதிவு செய்ய வேண்டும், AI நிறுவனங்களுக்கும் தளங்களுக்கும் கடுமையான விதிகள் வேண்டும் என்றும் அவை கேட்கின்றன.


மூலம்: SRF
புகைப்படம்: Jonas Leupe / Unsplash

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button