இலங்கைஉலகம்

‘அனோஜனின் மரண தண்டனையை இரத்து செய்யவும்’ சர்வதேச மன்னிப்புச் சபை வலியுறுத்து

சவுதி அரேபியாவினால் இலங்கையைச் சேர்ந்த இளைஞரான சிவராசா அனோஜனுக்கு விதிக்கப்பட்டுள்ள மரண தண்டனையை உடனடியாக இரத்து செய்ய வேண்டும் என சர்வதேச மன்னிப்புச் சபை (Amnesty International) அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள அந்த அமைப்பு, குறித்த குற்றச்சாட்டானது முற்றாக கருத்துச் சுதந்திரத்தின் அடிப்படையில் மட்டுமே அமைந்துள்ளது என்பதால், அவரை உடனடியாகவும் நிபந்தனையின்றியும் விடுதலை செய்ய வேண்டும் என சுட்டிக்காட்டியுள்ளது.

முகமது நபியை இழிவுபடுத்தும் வகையில் அமைந்த கருத்து ஒன்றை தனது சமூக ஊடகக் கணக்கில் பதிவிட்டார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட சிவராசா அனோஜனுக்கு, சவுதி அரேபிய மேன்முறையீட்டு நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

வெறுமனே தமது கருத்துக்களை வெளிப்படுத்தியதற்காக எவரையும் சிறையிலடைக்கவோ அல்லது மரண தண்டனை போன்ற தண்டனைகளுக்கு உட்படுத்தவோ கூடாது என சர்வதேச மன்னிப்புச் சபை சுட்டிக்காட்டியுள்ளது.

இதனிடையே, மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சிவராசா அனோஜன் குறித்து கண்டறிவதற்காக சவுதி அரேபியாவுக்கான இலங்கைத் தூதுவர் இன்று (08) அவர் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறைச்சாலைக்குச் செல்லவுள்ளார்.

சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த போது, அனோஜன் மீது மற்றொரு கைதி தாக்குதல் நடத்தி காயப்படுத்தியமை தொடர்பில் கண்டறிவதற்காகவே தூதுவர் தம்மாம் (Dammam) சிறைச்சாலைக்குச் செல்லவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, சிவராசா அனோஜனுக்கு எதிராக விதிக்கப்பட்டுள்ள மரண தண்டனைக்கு எதிராக அந்நாட்டு உயர் நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்வதற்காக சவுதி அரேபியாவிற்கு சென்றுள்ள இலங்கைப் பிரதிநிதிகள் குழு, இன்றைய தினமும் அது தொடர்பில் ஆராயவுள்ளது.

நேற்றைய தினமும் (07) அந்நாட்டு சட்டத்தரணிகளிடம் அது தொடர்பான சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக்கொண்டதாக பாராளுமன்ற உறுப்பினர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 17 ஆம் திகதிக்கு முன்னர் அனோஜனின் மேன்முறையீட்டைச் சமர்ப்பிக்க எதிர்பார்ப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் பைசர் முஸ்தபா குறிப்பிட்டுள்ளார்.

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button