உலகம்புதிய செய்திகள்

வானியல் ஆர்வலர்களுக்கு நாளை அதிகாலை காத்திருக்கும் இரட்டிப்பு மகிழ்ச்சி

நாளை (12) அதிகாலை, ‘பெர்சீட்ஸ்’ (Perseid) எனப்படும் எரிகல் மழை அதன் வருடாந்த உச்ச நிலையை அடையும் அதே வேளையில், ஆறு கோள்கள் வளைவு வடிவில் ஒரே நேர்கோட்டில் அணிவகுக்கவுள்ளதால் இலங்கையிலுள்ள விண்வெளி ஆர்வலர்கள் ஒரு அரிய வானியல் நிகழ்வைக் காணவுள்ளதாக மொறட்டுவை ஆதர் சி. கிளார்க் நவீன தொழில்நுட்ப மையத்தின் வானியல் பிரிவு அறிவித்துள்ளது.

நாளை சூரிய உதயத்திற்கு முன்னர் கிழக்கு மற்றும் தெற்கு வானத்தில் புதன், செவ்வாய், வியாழன், சனி, யுரேனஸ் மற்றும் நெப்டியூன் ஆகிய ஆறு கோள்கள் பரந்த வளைவு வடிவில் தோன்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் இந்த கோள்களின் அணிவகுப்பை சூரிய உதயத்திற்கு சுமார் 60 முதல் 90 நிமிடங்களுக்கு முன்னதாக, அதாவது அதிகாலை 4.30 மணிக்கும் 5.15 மணிக்கும் இடைப்பட்ட காலத்தில் பார்வையிட முடியும் என ஆதர் சி. கிளார்க் மையம் குறிப்பிட்டுள்ளது.

செவ்வாய் மற்றும் சனி கோள்களை மிகவும் எளிதாக அடையாளம் காண முடியும்.

இருப்பினும், புதன் மற்றும் வியாழன் கோள்கள் அடிவானத்திற்கு மிக அருகில் தோன்றுவதால் அவற்றைப் பார்ப்பது கடினமாக இருக்கலாம்.

யுரேனஸைப் இருநோக்கிப் பெருக்கியையும் (binoculars) நெப்டியூனைப் தொலைநோக்கியையும் (telescope) பயன்படுத்தி பார்வையிட முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அரிய வகை நிகழ்வினை பார்ப்பதற்கு வானியல் ஆர்வலர்கள் கிழக்கு மற்றும் தென்கிழக்கு அடிவானத்தை நோக்கித் தடைகளற்ற தெளிவான பார்வை கிடைக்கும் இடத்தை தேர்வு செய்யுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இதேவேளை ஜூலை 17 முதல் ஒகஸ்ட் 24 வரையான காலப்பகுதியில் பெர்சீட்ஸ்’ எரிகல் மழையின் அதி உச்ச நிலை நாளை அதிகாலை வானில் இடம்பெறவுள்ளதாக ஆதர் சி. கிளார்க் மையம் தெரிவித்துள்ளது.

சுமார் 133 வருடங்களுக்கு ஒருமுறை சூரியனைச் சுற்றி வரும் 109P/Swift-Tuttle என்ற வால்நட்சத்திரத்தினால் விட்டுச்செல்லப்பட்ட விண்வெளிப் பொருட்களினாலேயே பெர்சீட்ஸ் எரிகல் மழை உருவாகிறது.

இந்த எரிகற்கள் ‘பெர்சியஸ்’ (Perseus) விண்மீன் தொகுதியிலிருந்து தோன்றுவது போல் காட்சியளிக்கும்.

இம்முறை எரிகல் மழையின் உச்சம் அமாவாசை நாளான நாளை வருவதால், இருண்ட வானம் எரிகற்களைப் பார்ப்பதற்கு மிகவும் சாதகமான சூழலை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

தெளிவான வானிலை நிலவினால், ஒரு மணி நேரத்திற்கு 100 எரிகற்கள் வீழ்வதை மக்கள் பார்வையிட முடியும்.

பெர்சீட்ஸ் எரிகல் மழையைச் சிறப்பாகப் பார்ப்பதற்கு, நள்ளிரவுக்குப் பிறகு வடகிழக்கு வானத்தைப் பார்க்க வேண்டும் என்றும், கண்களுக்கு இருட்டை பழக்கப்படுத்த 20 முதல் 30 நிமிடங்கள் வரை அவகாசம் அளிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகாலைக்கு முன்னரான கோள்களின் அணிவகுப்பு மற்றும் எரிகல் மழை ஆகியவற்றின் இந்த இரட்டைச் சேர்க்கை, ஒகஸ்ட் 12-13 ஆம் திகதிகளில் இலங்கையின் வானியல் ஆர்வலர்களுக்கு ஒரு அரிய விண்வெளி விருந்தை வழங்கும் என ஆதர் சி. கிளார்க் மையம் சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button