உலகம்

கொங்கோவில் எபோலா வைரஸ் அதிவேகப் பரவல்: சர்வதேச மருத்துவக் குழு அவசர எச்சரிக்கை

ஜனநாயக கொங்கோ குடியரசில் எபோலா வைரஸ் தொற்று மிக அதிவேகமாகப் பரவி வருவதாகவும், இது “தீவிர கவலையளிக்கும்” ஒரு சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளதாகவும் ‘எல்லைகளற்ற மருத்துவர்கள்’ என்ற சர்வதேச மருத்துவக் தொண்டு நிறுவனம் எச்சரித்துள்ளது.

 

கொங்கோவில் எபோலா பரவல் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டு இரண்டு வாரங்கள் நிறைவடைந்துள்ளன.

இந்தநிலையில், இவ்வளவு குறுகிய காலத்தில் “இத்தனை அதிகமான பாதிப்புகள்” முன்னெப்போதும் பதிவானதில்லை என்று ஆளுகு நிறுவனத்தின் துணை இயக்குநர் ஆலன் கோன்சலஸ் தெரிவித்துள்ளார்.

 

இதற்கிடையில், வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் பணிகளை நேரில் மேற்பார்வையிடுவதற்காக, உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயேசஸ், மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள கொங்கோவின் கிழக்கு இட்டூரி மாகாணத்திற்கு நேற்று களப்பயணத்தை மேற்கொண்டார்.

தற்போதைய நிலவரப்படி, கொங்கோவில் எபோலா தொற்று இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுவோரின் எண்ணிக்கை 1,000 ஐத் தாண்டியுள்ளதுடன், குறைந்தது 246 மரணங்கள் பதிவாகியுள்ளன.

 

அண்டை நாடான உகாண்டாவிலும் 9 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், ஒரு மரணமும் பதிவாகியுள்ளது.

 

கட்டுப்பாட்டுப் பணிகளில் உள்ள சவால்கள்”இந்தத் தொற்றின் உண்மையான வீரியம் மற்றும் பாதிப்பின் அளவை தற்போது யாராலும் துல்லியமாகக் கணிக்க முடியாதுள்ளது.

தினமும் நூற்றுக்கணக்கான புதிய மாதிரிகள் பரிசோதிக்கப்படாமல் தேங்கிக் கிடக்கின்றன” என்று மருத்துவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

 

எல்லைகள் மற்றும் வானூர்தி நிலையங்கள் மூடப்பட்டிருப்பதால், மனிதாபிமான உதவிகளை வழங்குவதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது.

 

அத்துடன், கொங்கோவில் நிலவும் உள்நாட்டு ஆயுத மோதல்களும் வைரஸ் தடுப்புப் பணிகளுக்குப் பெரும் முட்டுக்கட்டையாக அமைந்துள்ளன.

இட்டூரி மாகாணத்தின் தலைநகரான புனியாவுக்கு சென்ற உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ், “எபோலாவால் உயிரிழந்தவர்களின் உடல்களைத் தொடுவது போன்ற சில பாரம்பரிய இறுதிச்சடங்கு பழக்கவழக்கங்கள் வைரஸை மேலும் பரப்பக்கூடும்.

 

ஏனவே நாம் நமது உறவினர்களை இழந்து துக்கத்தில் இருக்கும் இந்த வேளையில், மேலும் ஒரு உயிரைக் கூட இழக்காமல் இருக்கப் பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்” என்று பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

முன்னதாக, எபோலா மாதிரிகளைப் பரிசோதிப்பதற்காகப் புனியா நகரில் அமைக்கப்பட்டுள்ள தேசிய உயிரியல் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆய்வகத்திற்கு டெட்ரோஸ் சென்றிருந்தார்.

 

இதற்கு முன், மாதிரிகளைப் பரிசோதிக்க 1,500 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கொங்கோவின் தலைநகர் கின்ஷாசாவுக்கு அனுப்ப வேண்டியிருந்ததால் முடிவுகள் வரப் பல நாட்கள் தாமதமானது.

 

ஆனால், தற்போது இந்த புதிய ஆய்வகம் மூலம் 24 மணி நேரத்திற்குள் முடிவுகளைப் பெற முடியும் என்பதால், நோயாளிகளை விரைவாகக் கண்டறிந்து சிகிச்சையளிக்க முடிகிறது என்று உள்ளூர் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தற்;போது கொங்கோவில் பரவி வரும் எபோலா வைரஸானது ‘புந்திபுகியோ’ என்ற அரிய வகை திரிபாகும்.

 

இதற்கு இதுவரை அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகள் எதுவும் கண்டறியப்படவில்லை என்பதுடன், இந்தத் தொற்றால் பாதிக்கப்படுபவர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் உயிரிழக்கும் அபாயம் காணப்படுகிறது

.வழக்கமாக வெளவால்கள் போன்ற விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்குப் பரவும் இந்த வைரஸ், பாதிக்கப்பட்ட ஒருவரின் இரத்தம், உமிழ்நீர், வியர்வை, வாந்தி போன்ற உடல் திரவங்களை நேரடியாகத் தொடுவதன் மூலமும், அவர்கள் பயன்படுத்திய ஊசிகள் மற்றும் ஆடைகளைத் தொடுவதன் மூலமும் மற்றவர்களுக்குத் தீவிரமாகப் பரவுகிறது.

இதற்கிடையில், கொங்கோவில் இருந்து சமீபத்தில் திரும்பிய 37 வயதுடைய ஒருவருக்கு எபோலா தொற்று இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில், அவர் பிரேசிலின் சாவ் பாலோ மாகாணத்தில் உள்ள தொற்றுநோயியல் நிறுவனத்தில் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாகப் பிரேசில் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

 

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button