
இஸ்லாமியர்களின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றான ஹஜ் புனிதப் பயணத்தின் நிறைவையும், இறைத்தூதர் இப்ராஹிமின் தியாகத்தையும் நினைவுகூரும் தியாகத் திருநாளாம் பக்ரீத் பண்டிகை (ஈத்-உல்-அதா) இன்று உலகளாவிய ரீதியில் இஸ்லாமியர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.
இதையொட்டி, உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ள உலகப் புகழ்பெற்ற வரலாற்றுச் சின்னமான தாஜ் மஹால் வளாகத்தில் இன்று காலை சிறப்புத் தொழுகை நடைபெற்றது.
அதிகாலை முதலே ஆக்ரா மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் தாஜ் மஹால் வளாகத்தில் உள்ள மசூதியில் குவிந்தனர்.
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் புத்தாடைகளை உடுத்தி, பக்தி பூர்வமாக சிறப்புத் தொழுகையில் பங்கேற்றனர்.





