
நாட்டில் புகையிலைக் கட்டுப்பாடு மற்றும் புகைப்பழக்கத்தை நிறுத்தும் முயற்சிகளை வலுப்படுத்துவதற்காக, இலங்கையின் ஐந்து முன்னணி பல்கலைக்கழகங்களும் சர்வதேச சுகாதாரப் பங்காளர்களும் ஒன்றிணைந்துள்ளன.
புகையிலைப் பயன்பாட்டைக் குறைப்பது என்பது ஒரு பொது சுகாதார இலக்கு மட்டுமல்ல, அது ஒரு தேசிய அபிவிருத்தி முன்னுரிமையாகும் என சுகாதார பிரதியமைச்சர் ஹன்சக விஜயமுனி எடுத்துரைத்தார்.
சுகாதார பிரதியமைச்சரின் அனுசரணையில், கொழும்பில் உள்ள சின்னமன் லேக்சைட் (Cinnamon Lakeside) விடுதியில் நேற்று நடைபெற்ற, “இலங்கையில் புகையிலைப் பயன்பாட்டை மேம்படுத்துவதற்கும் புகைப்பிடித்தலைக் களைவதற்குமான உத்திகள்” குறித்த கலந்துரையாடல் மற்றும் ஊடக சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
ஆசியா முழுவதும் உள்ள பாதிக்கப்படக்கூடிய மக்களிடையே சுவாச நோய்களைக் குறைப்பதில் கவனம் செலுத்தும் சர்வதேச முன்னெடுப்பான, ‘உலகளாவிய சுகாதாரத்திற்கான ரெஸ்பையர்’ (RESPIRE) திட்டத்தின் கீழ் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய பிரதியமைச்சர் ஹன்சக விஜயமுனி, உலகளவில் தடுக்கக்கூடிய மரணங்களுக்கான முக்கிய காரணங்களில் ஒன்றாக புகையிலை பயன்பாடு நீடிப்பதாகக் குறிப்பிட்டார்.
இது நாட்டின் சுகாதார கட்டமைப்பு, பொருளாதாரம் மற்றும் குடும்பங்கள் மீது தேவையற்ற சுமையை ஏற்படுத்துகிறது என்றும், புகைப்பிடித்தலை 100 சதவீதம் தடுக்க முடியும் என்றாலும் அது மக்கள் சிக்கிக்கொள்ளும் ஒரு பொறி என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
“புகையிலைப் பொருட்களின் மீதான வரிவிதிப்பை அதிகரித்தல் உள்ளிட்ட பல ஒழுங்குமுறை நடவடிக்கைகளை இலங்கை பல ஆண்டுகளாகச் செயல்படுத்தியுள்ளது.எனினும், புகையிலைத் தொழில்துறையினர் மறைமுக சந்தைப்படுத்தல் உத்திகள் மற்றும் கவர்ச்சிகரமான தயாரிப்பு வடிவங்கள் மூலம் இளைஞர்களை அதிகளவில் குறிவைத்து வருகின்றனர்.
எனவே, புதிதாக உருவாகி வரும் நிகோடின் போதைப்பழக்க வடிவங்களுக்கு எதிராக அதிகாரிகள் விழிப்புடன் இருக்க வேண்டும்” என்றும் அவர் எச்சரித்தார்.
ஆரோக்கியமான தேசமே வலுவான பொருளாதாரம் மற்றும் உற்பத்தித்திறன் மிக்க சமூகத்திற்கு அடித்தளமாக அமைவதால், நாட்டில் புகைப்பிடிப்பைக் குறைப்பதற்கும், இறுதியில் அதனை முற்றிலுமாக ஒழிப்பதற்கும் அரசாங்கம் உறுதியாக உள்ளதாக பிரதியமைச்சர் மேலும் தெரிவித்தார்.
இந்த நிகழ்வின் போது, கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் பிரசன்ன ஹெரத், தனிநபர் புகைப்பிடித்தல் தடுப்பு தொடர்பான அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்ட புதிய வழிமுறை ஒன்றினை அறிமுகப்படுத்தினார்.
அத்துடன், புகைப்பிடிப்பதை நிறுத்துவதற்கான உத்திகள், அது தொடர்பான சுவாச நோய்கள் மற்றும் புகையிலைக் கட்டுப்பாட்டிற்கான ஆதார அடிப்படையிலான அணுகுமுறைகள் குறித்தும் மருத்துவ நிபுணர்களால் இங்கு விளக்கவுரைகள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.





