இலங்கை

பிரித்தானிய நாடாளுமன்றத்தில் ‘தமிழ் அரசியல் கட்டமைப்பு முன்முயற்சி’ தொடக்கம்!

இலங்கைத் தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை மையப்படுத்தி 1976 மே 14 அன்று ஏற்றுக்கொள்ளப்பட்ட வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ‘வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின்’ 50வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, பிரித்தானிய நாடாளுமன்றத்தில் புதியதொரு சர்வதேச அரசியல் செயல்முறை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

சர்வதேச சமூகத்திடமும், இலங்கை அரசாங்கத்திடமும் சமர்ப்பிப்பதற்கான தமிழ் மக்களின் ஒருங்கிணைந்த உத்தியோகபூர்வ அரசியல் வரைவு ஆவணமொன்றை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டு, இந்த ‘தமிழ் அரசியல் கட்டமைப்பு முன்முயற்சி’ (Tamil Political Framework Initiative) லண்டனில் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த முன்முயற்சியானது, தமிழர்கள் தனித்துவமானதொரு தேசியக் கட்டமைப்பைக் கொண்ட ஒரு சமூகம் என்ற அடிப்படையிலும், இலங்கைத் தீவின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் தமிழ் மக்களின் வரலாற்று ரீதியான பூர்வீக வாழ்விடங்கள் என்ற கோட்பாட்டின் படியும் முன்னெடுக்கப்படுகிறது.

அத்துடன், சர்வதேச சட்டக் கோட்பாடுகளுக்கு இணங்க தமிழ் மக்கள் தங்களின் சொந்த அரசியல் எதிர்காலத்தை ஜனநாயக ரீதியில் தீர்மானிப்பதற்கான சுயநிர்ணய உரிமையைக் கொண்டுள்ளனர் என்ற மூன்று பிரதான ஜனநாயகக் கொள்கைகளை இந்தச் செயல்முறை அடிப்படையாகக் கொண்டுள்ளது.

கடந்தகாலப் போரினால் பாதிக்கப்பட்ட மற்றும் உயிரிழந்த பொதுமக்களுக்கான ஒரு நிமிட மௌன அஞ்சலியுடன் நேற்று முன்தினம் இந்த நாடாளுமன்ற மாநாடு ஆரம்பமானது.

இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய மிச்சம் மற்றும் மோர்டன் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழர்களுக்கான அனைத்துக் கட்சி நாடாளுமன்றக் குழுவின் (APPGT) தலைவருமான சியோபான் மெக்டொனாக், ஒரு தலைமுறையில் முதல்முறையாக உண்மையான அரசியலமைப்பு மாற்றத்திற்கான சர்வதேசச் சூழல் தற்போது கனிந்துள்ளதாகக் குறிப்பிட்டார்.

 

மேலும், அந்த மாற்றங்களை வடிவமைக்கும் செயல்முறைகளில் தமிழ் மக்களுக்கு உரியதொரு பிரதிநிதித்துவமும் ஆசனமும் கிடைப்பதை உறுதி செய்வதே தற்போதைய முக்கிய தேவை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இந்த புதிய முன்முயற்சியானது இலங்கையின் வடக்கு – கிழக்குத் தாயகத்தின் மக்கள் பிரதிநிதிகள், சிவில் சமூக அமைப்புகள் மற்றும் உலகெங்கிலும் பரந்து வாழும் புலம்பெயர் தமிழ் சமூகங்களை ஒரே ஜனநாயகக் கட்டமைப்பு, ஒரே ஆணை மற்றும் ஒரே குரலின் கீழ் ஒன்றிணைப்பதாக மெக்டொனாக் தெரிவித்தார்.

அத்துடன், பிரித்தானியாவின் வளர்ச்சிக்கு மகத்தான பங்களிப்பை வழங்கி வரும் தமிழ் சமூகத்தின் இந்த அமைதி வழி அரசியல் முயற்சிக்கு பிரித்தானிய நாடாளுமன்றம் தனது ஆதரவை வழங்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்

 

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button