
இயற்கை அனர்த்த இழப்பீடுகளைப் பெற்றுக் கொள்வதற்காகப் பொய்யான காரணங்களைக் கூறி அரசாங்கத்திடம் பணம் பெற்றதாக நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா பகிரங்கமாகத் தெரிவித்துள்ளார்.
காரைநகர் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இன்று (30) அதன் தலைவர் ஸ்ரீபவானந்தாராஜா தலைமையில் நடைபெற்றது.
இதன்போது டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நட்டஈடு குறித்துக் கலந்துரையாடப்பட்ட போதே அவர் இந்தக் கருத்துக்களை முன்வைத்தார்.
கூட்டத்தில் கருத்துத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா, இலத்திரனியல் உபகரணங்கள் பாதிப்புக்காக வழங்கப்படும் 50,000 ரூபாய் இழப்பீடு குறித்து பிரதேச செயலரிடம் கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து, “தெற்கில் பலர் இவ்வாறான கொடுப்பனவுகளைப் பல்வேறு வழிகளில் பெறுகின்றனர். நானும் ஒரு பழைய அப்பிள் ஐபாட் (iPad) ஒன்றைக் காண்பித்து, அதற்குள் தண்ணீர் புகுந்து விட்டதாகக் கூறி அரசாங்கத்திடமிருந்து 50,000 ரூபாயைப் பெற்றேன். நாங்களும் பொய் கூறித்தான் வாங்குகின்றோம், நீங்களும் பொய்யாவது கூறி அந்தப் பணத்தைப் பெற்றுக் கொள்ளுங்கள்.” எனத் தெரிவித்தார்.
மேலும், 300 வீடுகளுக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மக்கள் தனக்குத் தெரிவித்துள்ளதாகவும், புகைப்படங்கள் அல்லது காணொளி ஆதாரங்கள் எதையும் எதிர்பார்க்காமல் உடனடியாக மக்களுக்கு அந்தக் கொடுப்பனவுகளை வழங்க நடவடிக்கை எடுக்குமாறும் அவர் அதிகாரிகளிடம் வலியுறுத்தினார்.
இக் கூட்டத்தில் கலந்துகொண்ட சமூகமட்ட அமைப்புகளின் பிரதிநிதி ஒருவர், இழப்பீட்டுப் பதிவுகள் தொடர்பாகப் பிரதேச செயலகம் மக்களுக்குச் சரியான விளக்கத்தை வழங்கவில்லை என்றும், கிராம சேவகர்கள் களத்திற்கு வந்து சேத விபரங்களைப் பார்வையிடவில்லை என்றும் குற்றம் சாட்டினார்.





