இலங்கை

அடுத்த 36 மணி நேரத்தில் பலத்த மழை – மின்னல் தாக்கம் குறித்து எச்சரிக்கை

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பலத்த மின்னல் தாக்கம் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் இடியுடன் கூடிய மழையுடன் பலத்த மின்னல் ஏற்படுவதற்கான அதிக சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் போது அந்தப் பகுதிகளில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. மின்னல் தாக்கங்களினால் ஏற்படும் விபத்துக்களைக் குறைத்துக்கொள்ளத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம், பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.

நாட்டில் அடுத்த 36 மணித்தியாலங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

நேற்று மாலை வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது

இடியுடன் கூடிய மழை

வடக்கு, வடமத்திய, கிழக்கு, மத்திய, வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, மன்னார், யாழ்ப்பாணம் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களின் தாழ்நிலப் பகுதியில் உள்ள மக்கள் வெள்ள அபாயம் தொடர்பாக அவதானமாக இருப்பது அவசியம் எனவும் குறிப்பாக குளங்களின் கீழப்பகுதிகளில் உள்ள மக்கள் மிக அவதானமாக இருப்பது அவசியம் என்றும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புவியியல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா எதிர்வு கூறியுள்ளார்.

10.12.2025 புதன்கிழமை காலை 7.00 மணிக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புவியியல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா வானிலை குறித்து எதிர்வுகூறுகையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் கன மழை
இலங்கையின் தென்கிழக்கே நிலவும் காற்றுச் சுழற்சி மற்றும் தென்மேற்கு பகுதியில் நிலவும் வளிமண்டல தளம்பல் நிலை காரணமாக தற்போது கிடைத்து வரும் மழை எதிர்வரும் 12.12.2025 வரை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வடக்கு மாகாணத்தின் பல இடங்களிலும் கடந்த 18 மணித்தியாலங்களுக்கு மேலாக மழை கிடைத்து வருகின்றது.

தொடர்ந்தும் கன மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது. குளங்கள் பலவும் வான் பாய்கின்றன. ஆறுகளும் அவற்றின் கொள்ளளவை எட்டியுள்ளன.

ஆகவே மன்னார், யாழ்ப்பாணம் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களின் தாழ்நிலப் பகுதியில் உள்ள மக்கள் வெள்ள அபாயம் தொடர்பாக அவதானமாக இருப்பது அவசியம். குறிப்பாக குளங்களின் கீழப்பகுதிகளில் உள்ள மக்கள் மிக அவதானமாக இருப்பது அவசியம் என்றார்.

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button