அரசியல்

அமெரிக்க விஜயத்தை நிறைவு செய்த ஜனாதிபதி ஜப்பான் பயணம்

ஐக்கிய நாடுகள் சபையின் 80 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக அமெரிக்க விஜயத்தை வெற்றிகரமாக முடித்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, உள்ளூர் நேரப்படி வியாழக்கிழமை (25) இரவு ஜோன் எஃப். கென்னடி சர்வதேச விமான நிலையத்திலிருந்து ஜப்பானுக்குப் புறப்பட்டார்.

ஜப்பானிய அரசாங்கத்தின் அழைப்பின் பேரில், ஜனாதிபதி செப்டம்பர் 27 முதல் 30 ஆம் திகதி வரை ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்வார்.

இந்த விஜயத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுடன் வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத்தும் இணைந்துள்ளார்.

இந்த விஜயத்தின் போது, ஜனாதிபதி திஸாநாயக்க ஜப்பானின் மாட்சிமைமிகு பேரரசரை சந்தித்துப் பேசவுள்ளதுடன், பரஸ்பர ஆர்வம்கொண்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து ஜப்பானிய பிரதமருடன் உச்சிமாநாட்டுச் சந்திப்பொன்றையும் நிகழ்த்தவுள்ளார்.

இலங்கையில் அதிகரித்து வரும் பொருளாதார வாய்ப்புகள் குறித்து கவனம் செலுத்தும் வகையில், முக்கிய ஜப்பானிய வணிகங்கள் மற்றும் டோக்கியோவில் உள்ள முதலீட்டாளர்களின் உயர் மட்டப் பிரதிநிதிகள் கலந்து கொள்ளும் வணிக மன்றத்தில் ஜனாதிபதி திஸாநாயக்க உரையாற்றவுள்ளார்.

“எக்ஸ்போ 2025” இல், இலங்கைத் தினத்தின் வைபவத்திற்கான ஜப்பான் அரசாங்கத்தின் விருந்தினராக, “எக்ஸ்போ 2025 ஒசாகா” நிகழ்விலும் ஜனாதிபதி திசாநாயக்க கலந்து கொள்வார்.

இந்நிகழ்வு சர்வதேச பார்வையாளர்களுக்கு இலங்கையின் கலாச்சாரப் பாரம்பரியம் மற்றும் பொருளாதார இயலுமையை முன்னிலைப்படுத்துவதனை நோக்கமாகக் கொண்டுள்ளது.

ஜப்பானில் வசிக்கும் இலங்கைச் சமூகத்தினரிடமும் ஜனாதிபதி உரையாற்றவுள்ளார்.

ஜப்பான் விஜயமானது, இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்பு மற்றும் ஒத்துழைப்புப் பிணைப்புகளை மேலும் பலப்படுத்துவதுடன், மென்மேலும் விரிவுபடுத்தும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button