
மேற்கிந்தியத் தீவுகளில் நடைபெற்றுவரும் 19 வயதுக்குட்பட்ட இளையோர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விக்னேஸ்வரன் ஆகாஷ் தொடர்ச்சியாக பந்துவீச்சில் பிரகாசிக்க, மேற்கிந்தியத் தீவுகளுடனான 3ஆவது போட்டியில் 8 விக்கெட்களால் இலங்கை அபார வெற்றியீட்டியது.
இந்த வெற்றியுடன் 7 போட்டிகளைக் கொண்ட இளையோர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரில் 2 – 1 என்ற ஆட்டங்கள் வித்தியாசத்தில் இலங்கை முன்னிலை அடைந்துள்ளது.
இந்தத் தொடரின் முதல் 2 போட்டிகளில் தலா 3 விக்கெட்களைக் கைப்பற்றிய ஆகாஷ், இந்தப் போட்டியில் 19 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களைக் கைப்பற்றி இலங்கையின் வெற்றிக்கு வழிவகுத்தார்.
அவருக்கு பக்கபலமாக பந்துவீசிய சாமிக்க சமுதித்த 33 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களைக் கைப்பற்றினார்.
அன்டிகுவா கூலிஜ் விளையாட்டரங்கில் வியாழக்கிழமை (04) நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய 19 வயதுக்குட்பட்ட மேற்கிந்தியத் தீவுகள் 39.2 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 138 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.
இயர்சின்ஹோ ஃபொன்டெய்ன் 51 ஓட்டங்களையும் ஜொஷுவா டோர்ன் 29 ஓட்டங்களையும் டைரிக் ப்றயன் 24 ஓட்டங்களையும் பெற்றனர்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய 19 வயதுக்குட்பட்ட இலங்கை அணி 22 ஓவர்களில் 2 விக்கெட்களை இழந்து 139 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.
விரான் சமுதித்த ஆட்டம் இழக்காமல் 64 ஓட்டங்களையும் கவிஜ கமகே ஆட்டம் இழக்காமல் 28 ஓட்டங்களையும் புலிஷ திலக்கரத்ன 21 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்துவீச்சில் ஆர்’ஜாய் கிட்டன்ஸ் 30 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.





