சுவிஸ்

சுவிஸ் பசும்பாலில் ரப்பர் தொடர்பான இரசாயனங்கள் கண்டுபிடிப்பு

சுவிட்சர்லாந்தில் உள்ள விஞ்ஞானிகள், பசும்பாலில் ரப்பர் தொடர்பான பல்வேறு இரசாயனப் பொருட்கள் இருப்பதைக் கண்டறிந்துள்ளனர். பால் கறக்கும் உபகரணங்கள் இதுவரை கவனிக்கப்படாத மாசுபாட்டின் மூலமாக இருக்கலாம் என ஆய்வு சுட்டிக்காட்டுகிறது.

சுவிட்சர்லாந்தின் 17 பண்ணைகளில் இருந்து பெறப்பட்ட பசும்பால் மாதிரிகளை ஆய்வுக் குழு பரிசோதித்தது. பரிசோதிக்கப்பட்ட நான்கு ரப்பர் இரசாயனங்களில் குறைந்தது ஒன்று 17 மாதிரிகளில் 7 மாதிரிகளில்கண்டறியப்பட்டது. அதேவேளை, பிரதான சாலைகளில் இருந்து தொலைவில் அமைந்துள்ள ஆல்ப்ஸ் மலைப் பகுதிகளிலுள்ள மூன்று பண்ணைகளின் மாதிரிகளில் இந்த இரசாயனங்கள் எதுவும் கண்டறியப்படவில்லை.

கண்டறியப்பட்ட இரசாயனங்கள் மனித ஆரோக்கியத்தில் ஏற்படுத்தும் தாக்கம் குறித்து இதுவரை தெளிவான தகவல்கள் இல்லை. இதுதொடர்பான மேலதிக ஆய்வுகள் மேற்கொள்ளப்படவுள்ளன. எனினும், பசும்பாலில் கண்டறியப்பட்ட இரசாயனங்களின் அளவு பொதுவாக குறைவாகவே இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பால் கறக்கும் உபகரணங்களா அல்லது வாகன டயர்களா?

மாசுபாட்டிற்கான சாத்தியமான காரணங்களில் ஒன்றாக பால் கறக்கும் இயந்திரங்களே இருப்பது ஆய்வாளர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

பால் உற்பத்தியில் பயன்படுத்தப்படும் குழாய்கள், சீல்கள் மற்றும் ஏனைய ரப்பர் பாகங்களை ஆய்வு செய்தபோது 14 வகையான இரசாயனங்கள் கண்டறியப்பட்டன. உணவுடன் தொடர்பு கொள்ள சட்டப்பூர்வமாக அனுமதிக்கப்பட்ட பொருட்களிலிருந்தே இந்த இரசாயனங்கள் வந்திருப்பது ஆச்சரியமளிப்பதாக ஆய்வின் தலைவரான Florian Breider தெரிவித்துள்ளார்.

ஆய்வு செய்யப்பட்ட பால் கறக்கும் உபகரணங்களில் 6PPD-quinone என்ற இரசாயனமும் கண்டறியப்பட்டது. இது சில மீன் இனங்களுக்கு தீங்கு விளைவிப்பதாக அறியப்படுகிறது. இந்தப் பொருள் ரப்பரில் நேரடியாக சேர்க்கப்படுவதில்லை. மாறாக, ரப்பர் பழமடையும் போது ஏற்படும் ஆக்சிஜனேற்றத்தின் விளைவாக உருவாகிறது.

மற்றொரு சாத்தியமான மூலமாக வாகன டயர்கள் மற்றும் சாலை மேற்பரப்புகளின் தேய்மானம் குறிப்பிடப்பட்டுள்ளது. உலகளவில் ஆண்டுதோறும் சுமார் 60 இலட்சம் தொன் ரப்பர் துகள்கள் சுற்றுச்சூழலுக்கு வெளியிடப்படுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இவை காற்று, மழைநீர் அல்லது உரங்கள் மூலம் விவசாய நிலங்களை அடைந்து, உணவுச் சங்கிலிக்குள் நுழையக்கூடும்.

இந்த இரசாயனங்களின் அளவு பருவகாலங்களுக்கு ஏற்ப எவ்வாறு மாறுகிறது என்பதையும், அவை எந்த வழிகளில் பாலுக்குள் நுழைகின்றன என்பதையும் கண்டறிய மேலதிக ஆய்வுகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

இந்த ஆய்வில் சுவிஸ் உணவுப் பாதுகாப்பு மற்றும் கால்நடை விவகாரங்களுக்கான மத்திய அலுவலகம் மற்றும் Agroscope ஆய்வு நிறுவனமும் இணைந்து செயல்பட்டுள்ளன.

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button