
தென்கிழக்கு சுவிட்சர்லாந்தின் தொலைதூரப் பகுதியில், நெதர்லாந்து நாட்டு சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்துக்குள்ளானதில் 5 பேர் உயிரிழந்ததுடன், 40 பேர் காயமடைந்துள்ளனர். அவர்களில் சிலரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக கிராபுண்டன் மாகாண பொலிஸார் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளனர்.
கிராபுண்டன் மாகாண பொலிஸாரின் தகவலின்படி, இது ஒற்றை வாகன விபத்தாகும். பேருந்து கிராபுண்டன் மாகாணத்தில் உள்ள செர்னெஸ் (Zernez) பகுதியில் இருந்து சூஷ் (Susch) நோக்கிச் சென்றுகொண்டிருந்தபோது, லெஸ் (Less) கிராமத்திற்கு அருகே வீதி நிர்மாணப் பணிகள் இடம்பெற்ற பகுதியில் வீதியை விட்டு விலகி கவிழ்ந்துள்ளது.
பேருந்தில் 45 வயது வந்த பயணிகள் இருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். அவர்களில் 5 பேர் உயிரிழந்துள்ளனர், 3 பேர் படுகாயமடைந்துள்ளனர், 7 பேர் மிதமான காயங்களுக்கும், 30 பேர் சிறிய காயங்களுக்கும் உள்ளாகியுள்ளனர்.
சுவிட்சர்லாந்து மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த 7 மீட்பு ஹெலிகொப்டர்கள் மற்றும் 13 அவசர மருத்துவக் குழுக்கள்சம்பவ இடத்துக்குச் சென்று, காயமடைந்தவர்களை பல்வேறு வைத்தியசாலைகளுக்கு அழைத்துச் சென்றன.
சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்காக செர்னெஸ் நகராட்சி வரவேற்பு மையம் ஒன்றை அமைத்து, உணவு மற்றும் பானங்களை வழங்கியுள்ளது.
விபத்துக்கான காரணம் தொடர்பான விசாரணைகள் தற்போது நடைபெற்று வருகின்றன.





