
பிரான்ஸின் மிகப்பெரிய பாலியல் தொழில் இணையதளமான “Meslibertines” தொடர்பாக பாரிஸ் அரசுத் தரப்பு வழக்கறிஞர் அலுவலகம் விசாரணையைத் தொடங்கியுள்ளது. இந்த இணையதளம் சுவிட்சர்லாந்தில் இயங்கி வருவதாகவும், துபாயில் வசிக்கும் சுவிஸ் குடிமகன் ஒருவருக்குச் சொந்தமானது எனவும் Radio Franceதெரிவித்துள்ளது.
முன்னர் “Sexemodel” என அழைக்கப்பட்ட இந்த இணையதளம், அண்மையில் “Meslibertines” எனப் பெயர் மாற்றப்பட்டுள்ளது. பிரான்ஸில் பாலியல் சேவைகள் மற்றும் விபச்சார விளம்பரங்களுக்கான முக்கிய இணையதளமாக இது விளங்குவதுடன், தினசரி சராசரியாக 4.3 இலட்சம் பார்வைகளையும், 45,000-க்கும் மேற்பட்ட செயலில் உள்ள விபச்சார விளம்பரங்களையும் கொண்டுள்ளது.
இந்த இணையதளத்தில் சிறுமிகளின் பாலியல் சேவைகளை வழங்குவதாகக் கூறும் நூற்றுக்கணக்கான பக்கங்கள்இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதையடுத்து, பிரான்ஸ் குழந்தைகள் விவகார உயர் ஆணையர், இணையதளத்தை மூடுமாறு அரசுத் தரப்பு வழக்கறிஞரிடம் கோரிக்கை விடுத்தார். இதன் பின்னரே விசாரணை ஆரம்பிக்கப்பட்டது.
சுவிட்சர்லாந்தை மையமாகக் கொண்ட இணையதளம்
இந்த இணையதளம் தன்னை வெறுமனே “விளம்பரங்களை வெளியிடும் தளம்” எனக் குறிப்பிடுகிறது. அதில் வெளியிடப்படும் விளம்பரங்களின் மூலம் ஏற்படும் எந்தவொரு தொடர்பு அல்லது சந்திப்புக்கும் தாங்கள் பொறுப்பல்ல என தெரிவிக்கும் தளம், சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு “பூஜ்ஜிய சகிப்புத்தன்மை” கொள்கையைப் பின்பற்றுவதாகவும் கூறுகிறது.
இந்நிலையில், அதன் சுவிட்சர்லாந்து தலைமையகம் பிரான்ஸ் அதிகாரிகளின் விசாரணை மற்றும் சட்ட நடவடிக்கைகளை சிக்கலாக்கியுள்ளது. இதையடுத்து, பிரான்ஸ் நீதித்துறை அதிகாரிகள் சுவிட்சர்லாந்திடம் பரஸ்பர சட்ட உதவி கோரியுள்ளனர்.
இந்த இணையதளத்தின் உரிமையாளர் எனக் கூறப்படும் 47 வயதான சுவிஸ் குடிமகன், 2011ஆம் ஆண்டு பிரான்ஸில் கடுமையான விபச்சாரத் தரகர் குற்றத்திற்காக மூன்று ஆண்டுகள் இடைநிறுத்தப்பட்ட சிறைத்தண்டனைபெற்றிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. அப்போது, அவருக்கு எதிரான சர்வதேச கைது உத்தரவை சுவிஸ் அதிகாரிகள் நடைமுறைப்படுத்த மறுத்ததாக France Inter தெரிவித்துள்ளது.
துபாயில் வசிப்பதாக தகவல்
இந்த இணையதளத்தை நடத்தும் சுவிஸ் குடிமகன் தற்போது துபாயில் வசித்து வருவதாகவும், பிரான்ஸில் உள்ள பல பாலியல் தொழிலாளர்கள் பயன்படுத்தும் இந்த தளத்தின் மூலம் ஆண்டுக்கு 2 கோடி யூரோக்களுக்கு மேல் வருமானம் ஈட்டுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
2025ஆம் ஆண்டிலேயே Mediapart அவரை தொடர்புபடுத்தி விரிவான விசாரணை அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது. அதன்படி, கடந்த 20 ஆண்டுகளாக சர்வதேச அளவிலான இணையவழி விபச்சார சாம்ராஜ்யத்தை அவர் நடத்தி வந்ததாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்தன. இடைத்தரகர்கள் மற்றும் போலி நிறுவனங்கள் மூலம் தனது வர்த்தக நடவடிக்கைகளை அவர் நிர்வகித்ததாகவும், அவற்றில் பெரும்பாலான நிறுவனங்கள் சுவிட்சர்லாந்து மற்றும் சைப்ரஸில் பதிவு செய்யப்பட்டிருந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.
பிரான்ஸில் சிறுமிகள் விபச்சாரத்தில் சிக்குவது அதிகரிப்பு
பிரான்ஸில் சிறுமிகள் விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்படுவது ஒரு முக்கிய பிரச்சினையாக உள்ளது. அரசுசாரா அமைப்புகளின் கணிப்பின்படி, குறைந்தது 20,000 சிறார்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 10 ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை 20 மடங்கு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
போதைப்பொருள் வர்த்தகத்தைவிட இது அதிக லாபகரமானதும் குறைந்த ஆபத்தானதுமாக இருப்பதாக கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட சிறுமிகளை, சிக்கலான குடும்பச் சூழ்நிலையைக் கொண்ட இளைஞர்களுக்கான காப்பகங்களில் இருந்தே தரகர்கள் அணுகி அழைத்துச் செல்வதாகவும், பின்னர் தங்களின் நடவடிக்கைகளை மறைப்பதற்காக அவர்களை அடிக்கடி வெவ்வேறு இடங்களுக்கு மாற்றுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.





