உலகம்

புடினின் முதன்மை ஜெனரல் கொல்லப்பட்டதாகத் தகவல்; உக்ரைன் அதிரடி

உக்ரைனில் ரஷ்யாவின் ஆக்கிரமிப்பில் உள்ள டொனெட்ஸ்க் (Donetsk) பிராந்தியத்தில் உக்ரைன் படைகள் நடத்திய அதிநவீன ஏவுகணைத் தாக்குதலில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினால் ‘ரஷ்யாவின் வீரன்’ (Hero of Russia) என நாட்டின் உயரிய விருது வழங்கி கௌரவிக்கப்பட்ட லெப்டினன்ட் ஜெனரல் செர்ஜி மில்சாகோவ் (Sergei Milchakov) கொல்லப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ரஷ்ய ராணுவத்தின் தெற்கு ராணுவ மண்டலத்திற்குட்பட்ட 51-வது ஒருங்கிணைந்த படைகளின் (51st Combined Arms Army) தளபதியாகச் செயல்பட்டு வந்த செர்ஜி மில்சாகோவ், உக்ரைனின் டொனெட்ஸ்க் பிராந்தியத்தில் அவ்டிவ்கா உள்ளிட்ட முக்கிய நகரங்களைக் கைப்பற்றுவதற்கான ராணுவ நகர்வுகளுக்குத் தலைமை தாங்கி வந்தார்.

உக்ரைன் படையினரின் ஏவுகணைகள் ரஷ்யாவின் முதன்மை மற்றும் மாற்று ராணுவக் கட்டுப்பாட்டு மையங்களை மிகத் துல்லியமாகத் தாக்கி அழித்ததில் மில்சாகோவ் உட்படப் பல உயர் ராணுவ அதிகாரிகள் பலியானதாகக் கூறப்படுகிறது.

 பல உயர் ராணுவ அதிகாரிகள் பலி

 

உக்ரைனின் மறைமுக ஆதரவு இயக்கமான ‘அதேஷ்’ (Atesh) மற்றும் ரஷ்யாவின் சுதந்திர ஊடகங்கள் இந்த மரணச் செய்தியைப் பரப்பி வருகின்றன. தாக்குதல் நடந்த ராணுவ முகாமின் துல்லியமான இருப்பிடம் ரஷ்ய ராணுவத்திற்குள் இருந்தே கசிந்திருக்கலாம் என்ற சந்தேகத்தை ரஷ்ய ஆதரவுப் பிரச்சாரகர்களும் எழுப்பியுள்ளனர்.

உக்ரைன் மீதான முழு அளவிலான போரில் இதுவரை 23-க்கும் மேற்பட்ட ரஷ்ய ஜெனரல்கள் கொல்லப்பட்டுள்ள நிலையில், மில்சாகோவின் இழப்பு ரஷ்ய ராணுவத்திற்குப் பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது.

இருப்பினும், இந்தத் தாக்குதல் மற்றும் ஜெனரல் செர்ஜி மில்சாகோவின் மரணம் குறித்த அதிகாரப்பூர்வமான உறுதிப்படுத்தலை மாஸ்கோவில் உள்ள ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் இதுவரை வெளியிடவில்லை.

உக்ரைன் படைகளின் இந்தத் திடீர் ஏவுகணைத் தாக்குதலால், கிழக்கு உக்ரைன் போர்க்களத்தில் மீண்டும் பதற்றமும் மோதல் சூழலும் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளன.

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button