சுவிஸ்

ட்ரம்பின் நடவடிக்கையால் அமெரிக்கா செல்வதை தவிர்க்கும் சுவிஸ் பயணிகள்; 16.5% பாரிய சரிவு

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நடவடிக்கைகள், சுவிட்சர்லாந்தில் இருந்து அமெரிக்காவுக்குச் செல்லும் பயணிகளின் எண்ணிக்கை குறைவதற்கு காரணமாகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டே அமெரிக்காவுக்கான பயண முன்பதிவுகள் குறைந்த நிலையில், 2026ஆம் ஆண்டின் முதல் பாதியில் அது மேலும் சரிந்துள்ளது.

ஜனவரி முதல் ஜூன் வரையிலான காலகட்டத்தில் சுமார் 120,000 சுவிஸ் பயணிகள் அமெரிக்காவுக்குச் சென்றுள்ளனர். இது கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 16.5% குறைவாகும் என சுவிஸ் பயணச் சங்கத்தின் நிர்வாக இயக்குநர் ஆண்ட்ரியா பெஃபா (Andrea Beffa) தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டும் அமெரிக்காவுக்குச் சென்ற சுவிஸ் பயணிகளின் எண்ணிக்கை 10.6% குறைந்து, 361,000-க்கும் சற்று அதிகமாக பதிவாகியிருந்தது.

இரண்டு தசாப்தங்களில் இல்லாத அளவுக்கு வீழ்ச்சி?

இந்த சரிவு தொடர்ந்து நீடித்தால், 2026ஆம் ஆண்டு முழுவதும் சுவிட்சர்லாந்தில் இருந்து அமெரிக்காவுக்கு வரும் பயணிகளின் எண்ணிக்கை சுமார் 300,000 ஆக இருக்கும் என பெஃபா தெரிவித்துள்ளார்.

இந்த எண்ணிக்கை 2007ஆம் ஆண்டு பதிவான அளவுக்கு நெருக்கமாக இருக்கும்.

கடந்த இரண்டு ஆண்டுகளில், அதாவது ட்ரம்ப் தனது இரண்டாவது பதவிக்காலத்தைத் தொடங்கிய பின்னர், அமெரிக்காவுக்கு வரும் சுவிஸ் பயணிகளின் எண்ணிக்கை சுமார் நான்கில் ஒரு பங்கு குறைந்துள்ளது.

இதற்கு மாறாக, 2024ஆம் ஆண்டில் சுவிட்சர்லாந்தில் இருந்து அமெரிக்காவுக்கு 404,434 பேர் சென்றிருந்தனர்.

அமெரிக்கா மீது அதிகரிக்கும் சந்தேகம்

அமெரிக்கா மீதான சுவிஸ் மக்களின் தயக்கமும் அதிகரித்துள்ளதாக Allianz Partners நடத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

65% சுவிஸ் மக்கள் தற்போது அமெரிக்கா செல்லும் திட்டம் இல்லை என Allianz Travel நிறுவனத்தின் சந்தைப்படுத்தல் மற்றும் தயாரிப்புப் பிரிவு தலைவர் பியா போட்னர் (Pia Bodner) தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு இந்த எண்ணிக்கை 53% ஆக இருந்தது.

மேலும், ஏற்கனவே திட்டமிட்டிருந்த அமெரிக்கப் பயணத்தை 7% பேர் ரத்து செய்ய திட்டமிட்டுள்ளதாகதெரிவித்துள்ளனர். கடந்த ஆண்டு இந்த எண்ணிக்கை வெறும் 2% ஆக இருந்தது.

அமெரிக்காவின் தற்போதைய அரசியல் சூழ்நிலைக்கு மக்கள் ஓரளவு பழகிவிட்டதாகக் கருதப்பட்ட நிலையில், சந்தேகம் மேலும் அதிகரித்திருப்பது ஆச்சரியமளிப்பதாக Allianz நிர்வாகி தெரிவித்துள்ளார்.

இளம் தலைமுறையினரிடம் மட்டும் மாற்றம்

இதற்கு மாறாக, 30 வயதுக்குட்பட்டவர்களில் 9% பேர் எதிர்காலத்தில் அமெரிக்காவுக்கு அதிகமாகப் பயணம் செய்யத் திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இதற்கு விமானக் கட்டணங்கள் குறைந்திருப்பது ஒரு காரணமாக இருக்கலாம் என Allianz நிர்வாகி குறிப்பிட்டுள்ளார்.

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button