சுவிஸ்தமிழீழம்தமிழ்

ஐரோப்பிய பத்திரிகையாளர் இடம்பெயர்வு இதழியல் விருது பெறும் முதல் ஈழத்து பெண்.

யார் இந்த ஊடகவியலாளர் கம்ஷிகா கிருஷ்ணமூர்த்தி ?

ஈழத் தமிழர்களின் போருக்கு பின்னரான வாழ்கை தொடர்பான ஆவணப்படுத்தலை தன்னை அடையாளப்படுத்தும் இந்த இளம் பெண் எதற்காக 2026 ஆம் ஆண்டுக்கான ‘European Press Prize Migration Journalism Award’ இன் ரன்னர்-அப் (Runner-up) கௌரவத்தைப் பெற்றுள்ளார் ?

இந்தச் சிறப்பைப் பெறும் முதல் ஈழத்தின் தமிழ் பெண் மற்றும் இரண்டாவது ஆசிய ஊடகவியலாளர் என்ற பெருமையை இவர் பெற்றுள்ளார்.

இந்த விருது எதற்காகக் கிடைத்தது?
கம்ஷிகா அவர்களுக்கு 2026 ஆம் ஆண்டுக்கான prestigious European Press Prize Migration Journalism Award இன் ரன்னர்-அப் (Runner-up) கௌரவம் வழங்கப்பட்டுள்ளது.

புலம்பெயர்வு (Migration) மற்றும் அகதிகள் சார்ந்த வாழ்வியலை ஆழமாகவும் துணிச்சலுடனும் வெளிக்கொணர்ந்தமைக்காகவும், குறிப்பாக ஒரு தமிழ்ப் புகலிடக் கோரிக்கையாளராகத் தான் கடந்துவந்த தனிப்பட்ட கடினமான பாதையையும், இலங்கையில் போருக்குப் பின்னரான சூழலில் தமிழர்கள் மற்றும் புலம்பெயர்ந்தோர் எதிர்கொள்ளும் மனித உரிமை மீறல்கள், துயரங்கள் ஆகியவற்றை சர்வதேச அரங்கில் தைரியமாகப் பதிவு செய்தமைக்காகவும் இந்த விருது வழங்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

ஸ்பெயினின் மெரிடா நகரில் நடைபெற்ற IX சர்வதேச புலம்பெயர்வு ஊடகவியல் மாநாட்டில் (IX International Congress of Migration Journalism) கலந்துகொண்டு, இலங்கையில் போர் முடிவடைந்து 17 ஆண்டுகள் கடந்த பின்னரும் தமிழர்கள் எதிர்கொள்ளும் தொடர்ச்சியான துயரங்கள் குறித்து சர்வதேச அரங்கில் குரல் கொடுத்துள்ளார்.

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் மற்றும் அரசியல் கைதிகள்: அரசியல் கைதிகளின் விடுதலை மற்றும் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் நிலைமை குறித்துக் கேள்வி எழுப்பியுள்ள அவர், பல ஆண்டுகளாகத் தங்களது உறவுகளைத் தேடித் தவிக்கும் குடும்பங்களுக்கு நீதி மற்றும் உண்மை வழங்கப்பட வேண்டும் எனவும், இலங்கை அரசாங்கம் இதற்கான பொறுப்பை ஏற்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

போருக்குப் பின்னரான பொருளாதார நெருக்கடிகள் மீள்குடியேற்றச் செயற்பாடுகளின்போது தமிழ்க் குடும்பங்கள் எதிர்கொள்ளும் வீடின்மை, வாழ்வாதார இழப்புகள், மற்றும் போதிய வசதிகளற்ற பாதுகாப்பற்ற வீடுகளில் வாழும் நிலை குறித்தும், ஒதுக்கப்பட்ட மீள்குடியேற்ற நிதிகள் மக்களைச் சென்றடைவதில் உள்ள தாமதங்கள் குறித்தும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இளைய தலைமுறையினரின் சவால்கள் மற்றும் கட்டமைப்பு அடக்குமுறைகள்: போரினால் பாதிக்கப்பட்டு வளர்ந்த இளைய தலைமுறையினர் எதிர்கொள்ளும் பொருளாதார நெருக்கடிகள், மனரீதியான பாதிப்புகள் மற்றும் கருத்துச் சுதந்திரத்திற்கான அச்சுறுத்தல்கள் பற்றிப் பேசியுள்ளார்.

மேலும், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தொடரும் இராணுவ ஆக்கிரமிப்பு, நில அபகரிப்பு மற்றும் தமிழர்களின் பண்பாட்டுக்கு எதிரான அச்சுறுத்தல்களைக் கண்டித்து, இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான கட்டமைப்பு ரீதியான இனப்படுகொலையும் திட்டமிட்ட பாகுபாடுகளும் தொடர்வதை சர்வதேச நாடுகளின் கவனத்திற்குக் கொண்டு சென்றுள்ளார்.

இளையவர்கள் ஏன் ஊடகத்துறையை முன்னெடுக்க வேண்டும்?

உண்மைகளை வெளிக்கொண்டு வருதல்: போரினால் பாதிக்கப்பட்டு, இடப்பெயர்வுகளைச் சந்தித்து வளர்ந்த இளைய தலைமுறையினர் தங்களது சொந்த மக்களின் கதைகளையும், ஒடுக்கப்பட்ட மக்களின் குரல்களையும் உலகிற்குத் துணிச்சலாக எடுத்துச் செல்ல ஊடகத்துறை மிகச்சிறந்த ஆயுதமாகும்.

அதிகாரத்திற்கு எதிரான குரல்: அநீதிகள், கட்டமைப்பு ரீதியான அடக்குமுறைகள், இன அழிப்பின் படிமானங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் எங்கு நடந்தாலும் அவற்றை மறைக்க விடாமல் தடுத்து, நீதிக்காகக் குரல் கொடுக்க இளைய ஊடகவியலாளர்களின் பங்களிப்பு அவசியமானது.

தாயகத்தில் ஊடக அடக்குமுறைக்கு உட்பட்டு பல தமிழ் ஊடகவியவியலாளர்களை இலங்கை அரசானது படுகொலை செய்திருந்தாலும் அவற்றையும் கடந்தும் இன்னும் பல ஊடகவியவியலாளர்கள் ஊடகத்துறையை தேர்ந்தெடுப்பதும் ஒருவகையான எழுச்சியே.

எமது மக்களின் உண்மையான வரலாறும், தியாகங்களும், தற்காலப் போராட்டங்களும் அடுத்த தலைமுறைக்குத் திரிபுபடுத்தப்படாமல் சென்று சேர்வதை உறுதி செய்ய வேண்டும். கடந்து வந்த பாதை எவ்வளவு கொடியது எதற்காக இத்தனை இழப்புகள் ? எந்த இலக்கு நோக்கி நாம் பணிக்க வேண்டும் என்பன போன்ற ஒரு விடையினை ஊடகவியலாளர்களின் எழுத்துகளே எமது அடுத்த தலைமுறைக்கு எடுத்துரைக்கும்.

சர்வதேச மேடைகளில் நம் மக்களின் நிலையை வலுவாக முன்வைத்து, எதிர்காலத் சந்ததியினர் அச்சமின்றி உரிமைகளுடன் வாழ்வதற்கான சூழலை உருவாக்க இளையவர்கள் ஊடகத்துறையில் முன்னின்று செயலாற்ற வேண்டும். இந்த இளையவரின் எடுத்துக்காட்டு, ஏனைய வடுக்களை சுமந்து வாழும் புலம்பெயர் இளையவர்களின் பாதையையின் எதிர்காலம் நோக்கிய தேடலில் ஒரு திருப்புமுனையாக அமையும் என்பதில் ஐயமில்லை.

பணம் சம்பாதித்து தன்னையும், தனது குடும்பத்தினையும் மாத்திரம் வளர்த்துக்கொண்டு ஒரு குறுகிய சிந்தனையில் வாழாமல் தான் சார்ந்த சமூகம், அதன் வலிகள், அதற்கான தீர்வுகள் எனவும் பல சிந்தனைகளுடன் தன்னையும் அறிவியல் ரீதியில் வளர்த்துக்கொள்ளும் இளையவர்கள் பலர் மேலும் வளர எமது வாழ்த்துக்கள்.

 

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button