
உலக செப்சிஸ் தினத்தை முன்னிட்டு, இன்று நோயின் ஆபத்துகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த சுவிஸ் செப்சிஸ் திட்டம் நடவடிக்கை எடுத்துள்ளது. செப்சிஸ் யாரையும் பாதிக்கக்கூடும். அதன் அறிகுறிகளை அடையாளம் காணத் தவறினால், அது உயிருக்கு ஆபத்தான அவசரநிலையாக மாறக்கூடும்.
சுவிட்சர்லாந்தில் ஒவ்வொரு ஆண்டும் மருத்துவமனைகளில் சுமார் 20,000 செப்சிஸ் நோயாளிகள் பதிவாகின்றனர். அவர்களில் சுமார் 4,000 பேர் உயிரிழக்கின்றனர். இந்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை மார்பகப் புற்றுநோய், குடல் புற்றுநோய் மற்றும் புரோஸ்டேட் புற்றுநோய் ஆகியவற்றால் ஏற்படும் உயிரிழப்புகளின் மொத்த எண்ணிக்கைக்கு நிகரானது என செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெர்னில், சுவிஸ் செப்சிஸ் திட்டத்தின் நோயாளிகள் மற்றும் குடும்ப உறுப்பினர்களைக் கொண்ட குழுக்கள் இணைந்து Sepsis Switzerland என்ற அமைப்பை தற்போது உருவாக்கியுள்ளன. நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன், பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறந்த ஆதரவை வழங்குவதும் இதன் நோக்கமாகும்.
உலக செப்சிஸ் தினத்தை முன்னிட்டு இந்த அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு கலந்துரையாடல் மற்றும் ஆலோசனைக்கான தளத்தை வழங்குவதே இதன் முக்கிய நோக்கமாகும்.
“செப்சிஸ் என்பது எப்போதும் மருத்துவ அவசரநிலையாகும்” என அமைப்பின் தலைவர் அன்டன் லோஃபெல் தெரிவித்துள்ளார்.
இந்த நிலை நிரந்தரமான உடல் மற்றும் உளவியல் பாதிப்புகளையும், உடல் உறுப்புகள் சேதமடைவதையும் அல்லது உறுப்புகளை அகற்ற வேண்டிய நிலை ஏற்படுவதையும் ஏற்படுத்தக்கூடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்
செப்சிஸ் இருப்பதாக சந்தேகம் ஏற்பட்டால், உடனடியாக மருத்துவ உதவியை நாட வேண்டும்.
“செப்சிஸ் குறித்து சிந்திப்பது உயிர்களைக் காப்பாற்றுவதாகும்” என லோஃபெல் தெரிவித்துள்ளார்.





