இந்தியா

கோரிக்கைகளை ஏற்ற இந்திய மத்திய அரசு! CJP போராட்டம் வாபஸ்

போட்டிப் பரீட்சைகளில் ஏற்பட்ட முறைகேடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்று வந்த போராட்டத்தை காக்ரோச் ஜனதா கட்சி (CJP) திரும்பப் பெற்றுள்ளது.

மத்திய அரசுடனான மூன்று கட்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பின், தங்களின் முக்கிய கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அக்கட்சி அறிவித்துள்ளது.

நீட் (NEET) உள்ளிட்ட போட்டித் தேர்வுகளில் ஏற்பட்ட முறைகேடுகளுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

இது போராட்டக்காரர்களின் முதன்மை கோரிக்கையாக இருந்தது.

டெல்லி மற்றும் பாஜக அல்லது அதன் கூட்டணிக் கட்சிகள் ஆளும் மாநிலங்களில் போராட்டக்காரர்கள் மீது பதிவு செய்யப்பட்ட அனைத்து எஃப்.ஐ.ஆர் (FIR) மற்றும் சட்ட நடவடிக்கைகளையும் திரும்பப் பெற அரசு ஒப்புக்கொண்டுள்ளது.

 

வழக்குகள் வாபஸ் பெறப்படுவது மற்றும் எதிர்கால சட்டப் பாதுகாப்பு குறித்த எழுத்துப்பூர்வ உறுதியை வரும் செவ்வாய்க்கிழமைக்குள் தருவதாக அரசு உறுதியளித்துள்ளதாக சிஜேபி செய்தித் தொடர்பாளர் சவுரவ் தாஸ் தெரிவித்துள்ளார்.

 

போராட்டக்காரர்கள் அளித்த 5 அம்ச கோரிக்கைகள் சாசனம் மற்றும் கல்வித் தேர்வு சீர்திருத்தங்கள் குறித்து அரசு பரிசீலித்து விவாதிக்கும் என்று பாஜக தலைவர் ஜே.பி. நட்டா உறுதியளித்துள்ளார்.

அரசின் உறுதியைத் தொடர்ந்து, நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆதரவாளர்கள் அமைதியான முறையில் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வருமாறு சிஜேபி தலைமை கேட்டுக்கொண்டுள்ளது.

இதேவேளை இந்திய கல்வி அமைச்சராக பிரகலாத் ஜோஷி நியமிக்கப்பட்டுள்ளார்.

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு சர்ச்சையைத் தொடர்ந்து மாணவர்களின் தொடர் போராட்டங்கள் வலுப்பெற்றதை அடுத்து, மத்திய கல்வி அமைச்சராக இருந்த தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

அதைத் தொடர்ந்து, பிரகலாத் ஜோஷி புதிய கல்வி அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ளார்.

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button