இந்தியாஇலங்கை

இந்திய யாத்திரிகர்களுக்கான இலவச விசா திட்டத்தில் மாற்றமில்லை – கொழும்பு இந்திய உயர்ஸ்தானிகராலயம்

கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம், இந்தியாவுக்கு யாத்திரை செல்லும் இலங்கைப் பிரஜைகளுக்கான விசா கட்டணக் கொள்கையில் எந்த மாற்றமும் இல்லை என்று தெளிவுபடுத்தியுள்ளது. தகுதி பெற்ற யாத்திரைக் குழுக்களுக்கு இலவச (Gratis) விசா தொடர்ந்து வழங்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளது.

வெள்ளிக்கிழமை (24) வெளியிடப்பட்ட அறிக்கையில், இலங்கைப் பிரஜைகளுக்கு விரைவாகவும் சிரமமின்றியும் விசாக்களை வழங்குவதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படுவதாகவும், இந்தியாவின் மின்னணு (e-Visa) சேவையையும் பயன்படுத்த முடியும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்திய உயர்ஸ்தானிகராலயம் ஊடாக விண்ணப்பிக்கும் இலங்கையர்கள், கொழும்பு, கண்டி, யாழ்ப்பாணம், ஹம்பாந்தோட்டை மற்றும் மட்டக்களப்பு ஆகிய இடங்களில் அமைந்துள்ள இந்திய தூதரக விண்ணப்ப மையங்கள் (ICAC) மூலம் இணையவழி விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.

இந்தியாவிற்கு, குறிப்பாக பௌத்த புனிதத் தலங்களுக்கு யாத்திரை மேற்கொள்ளும் இலங்கையர்களுக்கான விசாக்கள் விரைவாக வழங்கப்படுவதாக உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் பரிந்துரையுடன் விண்ணப்பிக்கும் 10 பேர் அல்லது அதற்கு மேற்பட்ட யாத்திரைக் குழுக்களுக்கு இலவச விசா வழங்கப்படும்.

விசா சேவையை வழங்கிய ஒப்பந்த நிறுவனம் மாற்றப்பட்டதால், இலவச விசா வழங்கும் நடைமுறை தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது. ஆனால், 2026 ஜூலை 7 முதல் புதிய சேவை வழங்குநர் பணியைத் தொடங்கியதைத் தொடர்ந்து, அந்த நடைமுறை மீண்டும் அமல்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாத்திரை விசா கோரிக்கைகள் புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் ஊடாக அனுப்பப்பட வேண்டும். விண்ணப்பதாரர்கள் 10 பேர் அல்லது அதற்கு மேற்பட்ட குழுவாக விண்ணப்பிக்கலாம். புதிய இந்திய அரசின் விதிமுறைகளின்படி, உயிரியல் அடையாளப் பதிவு (Biometric) செய்வதற்காக அவர்கள் குழுவாகவோ அல்லது தனித்தனியாகவோ ICAC மையங்களுக்கு செல்ல வேண்டும்.

எனினும், 12 வயது முதல் 70 வயது வரை உள்ள விண்ணப்பதாரர்களுக்கு மட்டுமே உயிரியல் அடையாளப் பதிவு கட்டாயமாகும்.

மேலும், உயிரியல் அடையாளப் பதிவுக்காக ICAC மையங்களுக்கு வரும் மூத்த குடிமக்களுக்கு, காத்திருக்கும் நேரத்தைக் குறைக்கும் வகையில் விரைவு சேவை (Expedited Process) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

நிர்ணயிக்கப்பட்ட நடைமுறையின்படி விண்ணப்பிக்கும் இலங்கை யாத்திரிகர்களுக்கு விசா கட்டணம் எதுவும் இல்லை. ஆனால், ICAC வழங்கும் சேவைகளுக்காக ரூ. 1,855 சேவை கட்டணத்தை மட்டும் செலுத்த வேண்டும் என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button