இலங்கை

அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தம் தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பு வேண்டும் – உதய கம்மன்பில

பிரதம நீதியரசரின் பதவிக் காலத்தை நீட்டிக்கும் உள்நோக்கத்துடன் ஒட்டுமொத்த நீதியரசர்களின் பதவிக் காலத்தையும் நீட்டிக்கும் வகையில் அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தத்தை கொண்டு வர அரசாங்கம் உத்தேசித்துள்ளது. இந்த திருத்தத்தால் உயர்நீதிமன்ற நீதியரசர்கள் அனைவரும் பயனாளியாகுவதால் இந்த திருத்தத்தை உயர்நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்த முடியாது. ஆகவே 22 ஆவது திருத்தம் தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பை ஜனாதிபதி நடத்த வேண்டும் என பிவிதுறு ஹெல உறுமய கட்சியின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான உதய கம்மன்பில தெரிவித்தார்.

கொழும்பில் உள்ள பிவிதுறு ஹெல உறுமய கட்சிக் காரியாலயத்தில்  திங்கட்கிழமை (17) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

 

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

பிரதம நீதியசர் பத்மன் சூரசேன எதிர்வரும் டிசெம்பர் மாதத்துடன் சேவையில் இருந்து ஓய்வுப்பெறவுள்ளார்.இவரது சேவை காலத்தை நீட்டிப்பதற்கு அரசாங்கம் ஆரம்பத்தில் முயற்சித்தது.அதற்கு பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்பு வெளியானதன் பின்னர் உயர்நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களின் பதவி காலத்தை நீட்டிப்பதற்கு அரசாங்கம் முயற்சித்தது.

நீதியரசர்களின் பதவி காலத்தை மாத்திரம் நீட்டிப்பதற்கு அரசாங்கம் எடுத்த முயற்சிக்கும் எதிர்ப்பு வெளியானதன் பின்னர் நீதியரசர்கள் உட்பட சகல நீதிபதிகளின் பதவி காலத்தையும் நீட்டிக்க அரசாங்கம் உத்தேசித்துள்ளது.

இதற்கமைய நீதியரசர்களின் பதவி காலத்தை நீட்டிக்கும் வகையில் அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தத்தை கொண்டு வர அரசாங்கம் தீர்மானித்துள்ளது. பிரதம நீதியரசர் என்ற தனிநபரை இலக்காகக் கொண்டு இந்த திருத்தம் கொண்டு வரப்படவுள்ளது. அரசாங்கத்திடம் எவ்வித குறுகிய நோக்கமும் இல்லாவிடின் பிரதம நீதியரசர் எதிர்வரும் டிசெம்பர் மாதம் சேவையில் இருந்து ஓய்வுப்;பெற்றதன் பின்னர் 22 ஆவது திருத்தத்தை முன்வைக்கலாம்.

அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தத்தின் பயனாளர்களான உயர்நீதிமன்ற நீதியரசர்கள் அனைவரும் உள்ளதால் இந்த திருத்தத்தை உயர்நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்த முடியாது. ஆகவே 22 ஆவது திருத்தம் தொடர்பில் மக்களின் அபிப்ராயத்தை கோருவதற்கு ஜனாதிபதி  சர்வஜன வாக்கெடுப்பை நடத்த வேண்டும்.அப்போது மக்களே இதற்கு சிறந்த ஒரு தீர்ப்பை வழங்குவார்கள் என்றார்.

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button