
பிரிட்டனில், இலகுரக விமானத்தின் சோதனைப் பறப்பின்போது விமானி, தனது பறக்கும் பாதையை பயன்படுத்தி “I’m bored” (எனக்கு சலிப்பாக இருக்கிறது) என்ற வாசகத்தை வானில் வரைந்த சம்பவம் இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Ravenair நிறுவனத்துக்குச் சொந்தமான Piper Tomahawk ரக விமானம், சனிக்கிழமை காலை 11.30 மணிக்குலிவர்பூலில் இருந்து புறப்பட்டு, விர்ரல் தீபகற்பம், செஷையர் மற்றும் வடக்கு வேல்ஸ் பகுதிகளின் மேல் சுமார் இரண்டு மணி நேரம் சோதனைப் பறப்பை மேற்கொண்டது. விமானத்தின் பறக்கும் பாதை, Flightradar24 செயலியில் “I’m bored” என்ற வடிவில் பதிவாகி சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவியது.
விமானத்தில் மாற்றப்பட்டிருந்த ஒரு சிலிண்டர் (Cylinder) உதிரிப்பாகம் சரியாக செயல்படுகிறதா என்பதை உறுதிப்படுத்துவதற்காகவே இந்த சோதனைப் பறப்பு நடத்தப்பட்டதாக Ravenair நிறுவனம் தெரிவித்துள்ளது. விமானம் பிற்பகல் 1.30 மணியளவில் மீண்டும் லிவர்பூலில் பாதுகாப்பாக தரையிறங்கியது.
Ravenair நிறுவனத்தின் செயல்பாட்டு மேலாளர் வேய்ன் பாரெட் கூறுகையில், “இது வெறும் சோதனைப் பறப்பாக இருந்ததால் விமானிக்கு சலிப்பு ஏற்பட்டிருக்கலாம். ஆனால் அந்த எழுத்துகளை வானில் உருவாக்கிய விதம் மிகவும் திறமையான பறக்கும் திறனை வெளிப்படுத்துகிறது” என்றார்.

மேலும், “விமானத்தின் சிலிண்டர் மாற்றப்பட்டிருந்தது. அத்தகைய மாற்றங்களுக்குப் பிறகு அனைத்தும் சரியாக இயங்குகிறதா என்பதை உறுதி செய்வதற்காக சோதனைப் பறப்பு நடத்துவது வழக்கம். அனைத்தும் சிறப்பாக இருந்தது. சலிப்பாக இருந்திருக்கலாம்; ஆனால் அந்த வார்த்தைகளை துல்லியமாக வானில் உருவாக்க அவர் முழு கவனத்துடன் விமானத்தை இயக்க வேண்டியிருந்தது” என்றும் அவர் தெரிவித்தார்.





