இலங்கை

அமெரிக்காவிற்கு கடல் நண்டு ஏற்றுமதி – விதிக்கப்பட்டிருந்த தடைகள் உத்தியோகபூர்வமாக நீக்கம்

இலங்கை கடல் நண்டுகளை (Blue Swimming Crabs) அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்வதற்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளதாக கடற்றொழில், நீரியல் மற்றும் சமுத்திர வளங்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.

 

அமெரிக்க அதிகாரிகளினால் இதற்கான உத்தியோகபூர்வ அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது

கடல்வாழ் பாலூட்டிகளைப் பாதுகாத்தல் மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மையை உறுதி செய்யும் அமெரிக்காவின் “கடல்வாழ் பாலூட்டிகள் பாதுகாப்புச் சட்டத்தின்” கீழ் விதிக்கப்பட்டிருந்த கடுமையான நிபந்தனைகளை இலங்கை வெற்றிகரமாகப் பூர்த்தி செய்துள்ளது.

 

இலங்கையின் கடல் நண்டு அறுவடை முறைகள் மற்றும் ஒழுங்குமுறை அமைப்புகள் அமெரிக்கத் தரநிலைகளுக்கு இணங்குவதை அமெரிக்க வர்த்தகத் திணைக்களத்தின் கீழ் இயங்கும் தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது.

கடந்த 2025 நவம்பரில் அமெரிக்க நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பினால் இந்த ஏற்றுமதி தொடர்பில் நிச்சயமற்ற நிலை ஏற்பட்டிருந்தது.

 

எவ்வாறாயினும், கடற்றொழில் திணைக்களம் மற்றும் நாரா (NARA) நிறுவனம் சமர்ப்பித்த அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் தரவுகளை ஆய்வு செய்த பின்னர், அமெரிக்க அதிகாரிகள் இந்த அனுமதியை வழங்கியுள்ளனர்.

 

இந்த அனுமதியின் ஒரு பகுதியாக, இலங்கைக்கு “Comparability Finding” எனும் கட்டாயச் சான்றிதழ் கிடைத்துள்ளது.

 

இந்தச் சான்றிதழ் 2029 டிசம்பர் 31 வரை செல்லுபடியாகும் என்பதால், அந்த காலப்பகுதி வரை தடையின்றி அமெரிக்காவிற்கு கடல் நண்டுகளை ஏற்றுமதி செய்ய வழிவகை ஏற்பட்டுள்ளது.

 

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button