
தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் தொடர்பான பிரச்சினைகள் குறித்து ஆராய்வதற்காக, அதுனுடன் தொடர்புடைய அமைச்சுக்களின் அதிகாரிகளுக்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அழைப்பாணை விடுத்துள்ளது.
இதன்படி, பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சு மற்றும் தொழில்அமைச்சு ஆகியவற்றின் பொறுப்புவாய்ந்த அதிகாரிகள் ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு பணிக்கப்பட்டுள்ளனர்.
மலையக சமூகம் மற்றும் தோட்டத் தொழிலாளர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சிவில் சமூக அமைப்புகளிடமிருந்து பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தினால் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட தோட்டத் தொழிலாளர்களுக்கான தினசரி சம்பளம், அவர்களுக்கு முறையாக வழங்கப்படுவதில்லை என்பதே இந்த முறைப்பாடுகளின் சாராம்சமாகும்.
அரசாங்கம் நிர்ணயித்த சம்பளத்தை வழங்குவதில் உள்ள தடைகள் மற்றும் தொழிலாளர்களின் உரிமைகள் மீறப்படுகின்றமை குறித்து அதிகாரிகளிடம் விளக்கம் கோரப்படவுள்ளது.
பாதிக்கப்பட்ட தொழிலாளர்களின் வாழ்வாதார உரிமையை உறுதிப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது





