
மட்டக்களப்பு:
தாயகத்தில் மட்டக்களப்பின் வரலாற்றுச் சிறப்புமிக்க இரு பெரும் பாடசாலைகளான மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரி (BT/Methodist Central College – Oldest schools in Sri Lanka 29.06.1814) மற்றும் புனித மைக்கேல் கல்லூரி (BT/St. Michael’s College, National School – 1873 ) ஆகியவற்றுக்கு இடையிலான வருடாந்த “பாடுமீன்களின் சமர்” (Battle of the Singing Fish – 2026) கிரிக்கெட் பெருவிழா கோட்டைமுனை விளையாட்டு கிராம புல்வெளி மைதானத்தில் (Koddaimunai Sports Village Turf Ground) கோலாகலமாக நடைபெற்றது.

பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியில் மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரி அணி அபார வெற்றிபெற்று சாம்பியன் பட்டத்தைச் சூடிக்கொண்டது. இத்துடன் தொடர்ச்சியாக 3ஆவது ஆண்டாக வெற்றியைத் தக்கவைத்து, சுழல்கிண்ணத்தை தமதாக்கிக் கொண்டு வரலாற்று சாதனை படைத்துள்ளது.
போட்டிச் சுருக்கம்:
இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மெதடிஸ்த மத்திய கல்லூரி அணி, தனது முதல் இன்னிங்ஸில் 9 விக்கெட்டுகளை இழந்து 191 ஓட்டங்களைக் குவித்தது. அணியின் துடுப்பாட்டத்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய எஸ். அகரன் (S. Aharan) அரைச்சதம் (61 ஓட்டங்கள்) கடந்து அணிக்கு வலுவான ஓட்ட எண்ணிக்கையைப் பெற்றுக்கொடுத்தார்.
தொடர்ந்து பதிலளித்து ஆடிய புனித மைக்கேல் கல்லூரி அணி, மெதடிஸ்த மத்திய கல்லூரியின் சிறந்த பந்துவீச்சு மற்றும் களத்தடுப்பை எதிர்கொள்ள முடியாமல் திணறியது. இதனால் 2ஆவது இன்னிங்ஸில் புனித மைக்கேல் கல்லூரி அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 61 ஓட்டங்களுக்கு சுருண்டது.
இதன் மூலம் மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரி அணி சிறப்பான 130 ஓடங்கள் வித்தியாசத்தில் வெற்றியைப் பதிவு செய்து வெற்றிச் கிண்ணத்தை தமதாக்கியது.
இரு பாடசாலைகளின் பழைய மாணவர்கள், மாணவர்கள் மற்றும் விளையாட்டு ரசிகர்கள் திரளாகக் கலந்துகொண்டு போட்டியை ஆரவாரத்துடன் கொண்டாடி மகிழ்ந்தனர்.






